Friday, October 10, 2008

கும்பகோணம் பூரியும் பாசந்தியும் (KUMBAKONAM0



கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு முகவுரை தேவையில்லை.
இசைக்கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் பிடித்துப்போன புண்ணிய பூமி இது.
கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப்புகையிலை, வாசனை சுண்ணாம்பு, ஊதிபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாம் கலந்த ரம்மியமான மணம் நிறைந்த ராமசாமிகோயில் சன்னதித்தெருவில் ஒரு முக்கியமான கடை "முராரி ஸ்வீட்ஸ்" இந்தக்கடையின் வயது 93.
கும்பகோணத்திற்கென்று தனியாக ஒரு சாப்பாட்டு புராணம் எழுதலாம். தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளைக்கு வெங்கடா லாட்ஜ் அல்வா என்றால் உயிர். பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம் பிள்ளையும், நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தேடிப்போவது பசும்பால் பஞ்சாமி அய்யர் காப்பிக்கடையைத்தான்.
எழுத்தாளர் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோருக்கு காந்திபூங்காவில் சந்திப்பு. சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு இட்லி வேண்டும். மங்களாம்பிகாவில் இட்லி சாப்பிடணும். கூடவே மிளகாய்ப்பொடியும் வேண்டும்.
கலைஞர்கள் வயிறு நிறைந்தவுடன் மறக்காமல் சமையல் கலைஞர்களை பாராட்டிவிட்டுச்செல்வார்கள். கும்பகோணத்திற்குரிய பண்பு இது.
நம்முடைய பூரி-பாசந்தி கதையைப் பார்ப்போம்.
நம்முடைய உணவில் பூரி அண்மைக்கால வரவு. ஆரம்பத்தில் நயமான கோதுமையில் பிறப்பெடுத்த பூரி இப்போது மைதாவில் அடைக்கலமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசந்தி துணைக்கு வந்தது. இப்போதெல்லாம் பூரி என்றவுடன் அடுத்தசொல் உருளைக்கிழங்கு என்றுதான் வாயில் வருகிறது.
பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல்நிற பாசந்தி பிறப்பெடுக்கும். சுடச்சுட கோதுமைப் பூரியைப்பிய்த்து பாசந்தி பாலேட்டில் தொட்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே...ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்.
ஆனால் கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸில் இன்றும் பூரி பாசந்தி கிடைக்கிறது. பூரிக்கு தொட்டுக்கொள்ள, கேட்டால் பாசந்தி தருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தைச்சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரிலால் சேட் 1915ல் தொடங்கிய கடை இது. இப்போது அவருடைய மகன்களின் நிர்வாகத்தில் கடை நடைபெறுகிறது.
பூரி-பாசந்திக்கு பக்குவம் என்ன?
கடைக்காரரின் பதில்:
"பத்து பங்கு பால். அரைப்பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப்பங்கு பாலாடையாக சுண்டவேண்டும். இறக்கும் பதத்தில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளுங்கள். பாசந்தி ரெடியாகிவிடும். நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர்விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷம் ஈரத்துணிபோட்டு போர்த்தி புளிக்கவிட்டு போட்டு எடுத்தால் பூரியும் தயாராகிவிடும்."
பூரியை பிய்த்து பாசந்தியில் தொட்டு வாயில் வைத்தால் கரைந்து வயிற்றுக்குள் இறங்கும் அனுபவம் ஒரு ஆனந்தம்.
ஆமாம், நீங்கள் நினைப்பதுதான் சரி.
கும்பகோணத்தில் எல்லாக்காலங்களிலும் அற்புதக்கலைஞர்கள் யாராவது இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி: தினமணி
தகவல்: மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

வடசேரிக்காரர்களின் பட்டாணிக்கடை (VADASERI)




தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்கள்தான் சென்னையில் பட்டாணித்தொழில் செய்யும் பிரபலமானவர்கள். மா.ஏழுமலைத்தேவர் என்பவர் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர். இவருடைய பேட்டி தினமணியில் வெளியானது. அதன் சாராம்சம்.
திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம், தாம்பரம், பொன்னேரி, மீஞ்ஞூர், கும்மிடிப்பூண்டி முதல் நெல்லூர் வரை பட்டாணிக்கடைகளை நடத்திவருகிறவர்கள் பெரும்பாலும் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
மார்க்கெட் இருக்கும் இடத்தில் இவர்களின் கடை இருக்கும். ஒருவர் கடை வைத்திருக்கும் மார்க்கெட்டில் இன்னொருவர் கடை வைக்கமாட்டார்களாம். மூதாதையர் காலத்தில் இருந்து கடைபிடித்துவரும் வியாபார ஒழுக்கம் இது.
1857ல் தான் சென்னை மெமோரியல் தெருவில் கனகசபைத்தேவர் என்பவர் முதன்முதலாக பட்டாணிக்கடையைத்தொடங்கினார். காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த மன்னார்குடி பகுதி 10 ஆண்டுகள் தொடர் பஞ்சத்தில் சிக்கியதாம். அப்போது பிழைப்புத்தேடி வெளியேறியவர்கள் இன்று பட்டாணிக்கடை வியாபாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.
வறுத்த பட்டாணி, உப்புக்கடலை, உடைத்த கடலை, பொரிகடலை இவற்றின் சுவை, பக்குவம் இவற்றிற்கெல்லாம் முதற்படி அடுப்புதான். இளஞ்சூடாகவும் வெப்பம் அதிகரிக்காமலும் இருக்க பல நுணுக்கங்களை இவர்கள் கையாளுகிறார்கள். வறுக்கப்பயன்படும் மணலும் முக்கியமானது. ஆறுகளில் இருந்தும், கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட மணலை சலித்து குறுமணலாக்கி பட்டாணியை வறுக்க பயன்படுத்துகிறார்கள். மணல் பெரிதாக இருந்தால் வெப்பத்தில் வெடிக்குமாம்.
முதலில் பட்டாணியை சூடுபடுத்துவார்கள். அதனை முறத்தில்போட்டு மஞ்சள், உப்புக்கரைசலை தெளிப்பார்கள். அடுப்பில் உள்ள மணலில் போட்டு இளஞ்ஞூட்டில் பக்குவமாக வறுத்தெடுத்தால் மஞ்சள் நிற பட்டாணி தயார்.
உடனுக்குடன் தயாரித்து விற்கும் இந்த வியாபாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மழைக்காலம் ஆகிய நாட்களில் சூடு பிடிக்கிறது.
பல நவீன இயந்திரங்கள் வந்துவிட்டாலும் கைப்பக்குவத்தை நம்பித்தொழில் செய்யும் வடசேரிக்காரர்கள் அசகாய சூரர்கள்தான்.
தகவல்: மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Monday, September 29, 2008

ஒரு நாளில் 5000 டீ போடும் மன்னார்குடி (MANNARGUDI) நேதாஜி

ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்
செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும் டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில் ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும். டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம். டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால் நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம் வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு. பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி

cauverynagarwest@gmail.com

Friday, June 20, 2008

ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் கோயிலின் எதிரே மிகப்பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது.
ஒரு உண்மையான குதிரை வானவெளியில் தாவிச்செல்ல முன்னிரு கால்களையும்
தூக்கினால், அதன் அங்க அமைப்பு, சதைமடிப்பு, நரம்புத்துடிப்பு எப்படியிருக்குமோ அதே
நிலையில் அழகான கலை நுட்பத்துடன் 33 அடி உயர குதிரை சிலை அய்யனார் சன்னதிக்கு எதிரில் நிற்கிறது.

ஆசியாக்கண்டத்திலேயே மிகப்பெரிய குதிரை சிலை இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள கோவிலில் உறையும் இறைவன் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் என்று அழைக்கப்படுகிறார்.

அறநிலையத்துறையைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நெடும் தொலைவில் இருந்தெல்லாம் வந்து செல்லுகிறார்கள்.

குதிரை மற்றும் யானை இவையெல்லாம் அய்யனாரின் வாகனங்களாக போற்றி வணங்கப்படுவது தமிழர் மரபு.

தகவல்: ஆசிரியர் அ.சண்முகம்-சித்துக்காடு

Thursday, June 19, 2008

ஒரு நாகசுரம் உருவாகிறது



நாகசுரம் ராஜவாத்தியம் எனப்படுகிறது.
ஆறுகால பூஜைகளிலும் இந்த நாகசுரம் வாசிக்கப்படுகிறது.
விடியற்காலத்தில் பூபாளமும்
காலையில் மலையமாருதமும்
உச்சிக்காலத்தில் சுருட்டி மத்யமாவதி ராகங்களும்
மாலைப்பொழுதில் கல்யாணி, பூர்வி கல்யாணியும்
முன் இரவிலும்
அர்த்த ஜாமத்திலும் நீலாம்பரியும்
கோவில்களில் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன.
தற்போது வாசிக்கப்படும் நாகசுரம் பாரி நாகசுரம் எனப்படும்.

இதனை வடிவமைத்து உருவாக்கிய பெருமை கும்பகோணம் அருகில் உள்ள
நரசிங்கம்பேட்டையைச்சேர்ந்த மறைந்த என். ரங்கநாத ஆசாரியாரையே சேரும்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் உத்திரங்களாக பயன்படுத்தப்பட்ட
நன்கு உலர்ந்த ஆச்சா மரத்தில் இருந்துதான் இந்த பாரி நாகசுரம் உருவாக்கப்படுகிறது.

நாகசுரம் சீவாளி கெண்டை, உலவு எனப்படும் நீண்ட பாகம், அணசு போன்ற பாகங்களைக்
கொண்டதாகும். சுமார் 2.5 அடி நீளம், 2 அங்குல அகலம் கொண்ட உருண்டை வடிவ உலவு
பகுதியை சிறிதும் பெரிதுமான-பெருக்களவு, அடுக்களவு, கொத்து- பல்வேறு கூரிய வாள்
போன்ற இரும்புக்கம்பிகளைக்கொண்டு கடைந்து பெரிய துவாரத்தை உருவாக்குகின்றனர்.
முதன்மை சுரங்களுக்காக நேர்கோட்டில் 7 துளைகளும், காற்றை வெளியேற்றுவதற்காக
அடிப்பகுதியில் பக்கத்திற்கு இருதுளைகள் வீதம் நான்கு துளைகளும், நடுப்பகுதியில் ஒரு
துளையுமாக மொத்தம் 12 துளைகள் இடப்பட்ட குழல் பகுதி உருவாக்கப்படுகிறது.
அடியில் புனல் வடிவில் அணைவுக்காக இணைக்கப்படும் அணசு, வாகை மரத்தில் தயாரிக்கப்
படுகிற்து.

ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாக
பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம்
தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகசுரக்கருவிகளை நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.

-கலை விமரிசகர் தேனுகா-தினமணியில் எழுதிய கட்டுரையில் இருந்து...
தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

தஞ்சாவூர் வீணை(THANJAVUR VEENA)

வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெறுகிறது.
வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து
வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள்
செய்யலாமாம். வீணையின் அளவு நாலேகால் அடி. வெளிக்கூடு அகலம் பதினாலரை
அங்குலம்.சராசரியாக 7 கிலோவிலிருந்து 9 கிலோவரையில் எடை இருக்கும்.

சரஸ்வதி வீணை, ஏகதண்டி வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில்
செய்யப்படுகின்றன.வீணையின் குடத்தின்மேல் சிற்பங்களும் செதுக்குகிறார்கள்.

வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம்.
நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது
குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து
முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம்
உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள்
8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.

ஆதாரம்: தினமணி
cauverynagarwest@gmail.com

அச்சு வெல்லமே...அச்சு வெல்லமே...




தமிழ்நாட்டில் பழனி, புளிக்கல் பாளையம், தர்மபுரி, தாராபுரம், நெய்க்காரன் பட்டி இங்கெல்லாம்
வெல்லமும் சர்க்கரையும் தயாராகிறது. இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப்படுகை
யில் உள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி, உப்பளப்பாடி, நக்கம்
பாடி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தயாரிக்கப்படும் வெல்லமும் சர்க்கரையும்
சிறப்பாக பேசப்படுகிறது. காவிரிப்படுகையின் மண்வாகு சிறப்பாக இருப்பதால் தஞ்சை பகுதி
யில் உற்பத்தியாகும் வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும் தனியான மதிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுத்தங்கம் என்றால் அச்சு வெல்லத்தையும், சர்க்கரையையும்
குறிக்கும். வெள்ளைத்தங்கம் என்றால் சீனியைக்குறிக்கும்.
காவிரிப்படுகையில் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து எந்திரங்கள்மூலம் சாறுபிழியப்படுகிறது.
பெரிய கொப்பரையில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாறு நிரப்பப்பட்டு, கரும்புச்சக்கைகளால்
எரியும் அடுப்பில் கொதிக்கவைக்கப்படுகிறது.
கரும்புச்சாற்றில் உள்ள அழுக்குகளை எடுக்க சோடா உப்பு, குருணை ஹைட்ரஸ் போன்றவற்றை
சிறிதளவு சேர்க்கிறார்கள். சாறுகொதித்து பாகாய் மாறும் தருணத்தில் அச்சுக்களில் ஊற்றினால்
அருமையான வெல்லம் தயார்.
பாகை ஆறவைத்து துடுப்பால் கிளறினால் சர்க்கரை தயார். மிதமான பதத்தில் உருண்டை
அச்சுக்களில் ஊற்றினால் உருண்டை வெல்லம் தயார்.