Friday, June 20, 2008

ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் கோயிலின் எதிரே மிகப்பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது.
ஒரு உண்மையான குதிரை வானவெளியில் தாவிச்செல்ல முன்னிரு கால்களையும்
தூக்கினால், அதன் அங்க அமைப்பு, சதைமடிப்பு, நரம்புத்துடிப்பு எப்படியிருக்குமோ அதே
நிலையில் அழகான கலை நுட்பத்துடன் 33 அடி உயர குதிரை சிலை அய்யனார் சன்னதிக்கு எதிரில் நிற்கிறது.

ஆசியாக்கண்டத்திலேயே மிகப்பெரிய குதிரை சிலை இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள கோவிலில் உறையும் இறைவன் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் என்று அழைக்கப்படுகிறார்.

அறநிலையத்துறையைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நெடும் தொலைவில் இருந்தெல்லாம் வந்து செல்லுகிறார்கள்.

குதிரை மற்றும் யானை இவையெல்லாம் அய்யனாரின் வாகனங்களாக போற்றி வணங்கப்படுவது தமிழர் மரபு.

தகவல்: ஆசிரியர் அ.சண்முகம்-சித்துக்காடு

Thursday, June 19, 2008

ஒரு நாகசுரம் உருவாகிறது



நாகசுரம் ராஜவாத்தியம் எனப்படுகிறது.
ஆறுகால பூஜைகளிலும் இந்த நாகசுரம் வாசிக்கப்படுகிறது.
விடியற்காலத்தில் பூபாளமும்
காலையில் மலையமாருதமும்
உச்சிக்காலத்தில் சுருட்டி மத்யமாவதி ராகங்களும்
மாலைப்பொழுதில் கல்யாணி, பூர்வி கல்யாணியும்
முன் இரவிலும்
அர்த்த ஜாமத்திலும் நீலாம்பரியும்
கோவில்களில் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன.
தற்போது வாசிக்கப்படும் நாகசுரம் பாரி நாகசுரம் எனப்படும்.

இதனை வடிவமைத்து உருவாக்கிய பெருமை கும்பகோணம் அருகில் உள்ள
நரசிங்கம்பேட்டையைச்சேர்ந்த மறைந்த என். ரங்கநாத ஆசாரியாரையே சேரும்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் உத்திரங்களாக பயன்படுத்தப்பட்ட
நன்கு உலர்ந்த ஆச்சா மரத்தில் இருந்துதான் இந்த பாரி நாகசுரம் உருவாக்கப்படுகிறது.

நாகசுரம் சீவாளி கெண்டை, உலவு எனப்படும் நீண்ட பாகம், அணசு போன்ற பாகங்களைக்
கொண்டதாகும். சுமார் 2.5 அடி நீளம், 2 அங்குல அகலம் கொண்ட உருண்டை வடிவ உலவு
பகுதியை சிறிதும் பெரிதுமான-பெருக்களவு, அடுக்களவு, கொத்து- பல்வேறு கூரிய வாள்
போன்ற இரும்புக்கம்பிகளைக்கொண்டு கடைந்து பெரிய துவாரத்தை உருவாக்குகின்றனர்.
முதன்மை சுரங்களுக்காக நேர்கோட்டில் 7 துளைகளும், காற்றை வெளியேற்றுவதற்காக
அடிப்பகுதியில் பக்கத்திற்கு இருதுளைகள் வீதம் நான்கு துளைகளும், நடுப்பகுதியில் ஒரு
துளையுமாக மொத்தம் 12 துளைகள் இடப்பட்ட குழல் பகுதி உருவாக்கப்படுகிறது.
அடியில் புனல் வடிவில் அணைவுக்காக இணைக்கப்படும் அணசு, வாகை மரத்தில் தயாரிக்கப்
படுகிற்து.

ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாக
பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம்
தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகசுரக்கருவிகளை நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.

-கலை விமரிசகர் தேனுகா-தினமணியில் எழுதிய கட்டுரையில் இருந்து...
தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

தஞ்சாவூர் வீணை(THANJAVUR VEENA)

வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெறுகிறது.
வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து
வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள்
செய்யலாமாம். வீணையின் அளவு நாலேகால் அடி. வெளிக்கூடு அகலம் பதினாலரை
அங்குலம்.சராசரியாக 7 கிலோவிலிருந்து 9 கிலோவரையில் எடை இருக்கும்.

சரஸ்வதி வீணை, ஏகதண்டி வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில்
செய்யப்படுகின்றன.வீணையின் குடத்தின்மேல் சிற்பங்களும் செதுக்குகிறார்கள்.

வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம்.
நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது
குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து
முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம்
உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள்
8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.

ஆதாரம்: தினமணி
cauverynagarwest@gmail.com

அச்சு வெல்லமே...அச்சு வெல்லமே...




தமிழ்நாட்டில் பழனி, புளிக்கல் பாளையம், தர்மபுரி, தாராபுரம், நெய்க்காரன் பட்டி இங்கெல்லாம்
வெல்லமும் சர்க்கரையும் தயாராகிறது. இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப்படுகை
யில் உள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி, உப்பளப்பாடி, நக்கம்
பாடி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தயாரிக்கப்படும் வெல்லமும் சர்க்கரையும்
சிறப்பாக பேசப்படுகிறது. காவிரிப்படுகையின் மண்வாகு சிறப்பாக இருப்பதால் தஞ்சை பகுதி
யில் உற்பத்தியாகும் வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும் தனியான மதிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுத்தங்கம் என்றால் அச்சு வெல்லத்தையும், சர்க்கரையையும்
குறிக்கும். வெள்ளைத்தங்கம் என்றால் சீனியைக்குறிக்கும்.
காவிரிப்படுகையில் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து எந்திரங்கள்மூலம் சாறுபிழியப்படுகிறது.
பெரிய கொப்பரையில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாறு நிரப்பப்பட்டு, கரும்புச்சக்கைகளால்
எரியும் அடுப்பில் கொதிக்கவைக்கப்படுகிறது.
கரும்புச்சாற்றில் உள்ள அழுக்குகளை எடுக்க சோடா உப்பு, குருணை ஹைட்ரஸ் போன்றவற்றை
சிறிதளவு சேர்க்கிறார்கள். சாறுகொதித்து பாகாய் மாறும் தருணத்தில் அச்சுக்களில் ஊற்றினால்
அருமையான வெல்லம் தயார்.
பாகை ஆறவைத்து துடுப்பால் கிளறினால் சர்க்கரை தயார். மிதமான பதத்தில் உருண்டை
அச்சுக்களில் ஊற்றினால் உருண்டை வெல்லம் தயார்.

Monday, June 16, 2008

திருவையாற்றில் ஏழூர் பல்லக்கு-சப்தஸ்தானம் in THIRUVAIYARU












சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்.

Monday, June 9, 2008

தஞ்சாவூர் மாலைகள்(THANJAVUR GARLANDS)



தஞ்சாவூர் மாலைகள்.
தஞ்சாவூர் மாலைகள் பெரும்பாலும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடியவை.
இதில் நெல்மாலை என்பது ஒரு வகை. இது ஒரு சுள்ளியின் துணையோடு கட்டப்படுவது.
நடுவே ஒரு சுள்ளியையும் இரு புறங்களிலும் நெல்மணிகளையும் பட்டுநூல்
கொண்டு இணைத்து முடியப்படுகிறது. தேவையான அளவில் அட்டையை வெட்டி
எடுத்து நெல்மணிகள் இணைக்கப்பட்ட சுள்ளிகளை அதில் வைத்து தைத்து
விடுகின்றனர். அதன்மேல் ஜரிகையைக்கொண்டு வேலைப்பாடுகள் செய்துவிடுகின்றனர்.
இந்த ஜரிகைகள் சூரத்தில் இருந்து தருவிக்கப்படுகின்றன.
இதனையடுத்து பல வண்ணங்களில் பதக்கங்கள் செய்து மாலைகளை இணைக்கப்
பயன்படுத்துகின்றனர். பதக்கங்களில் தங்கம்போல் ஜொலிக்கும் கயிறும்
அவற்றில் கோர்க்கப்படும் மணிகளும் மாலையை மேலும் அழகுபடுத்துவதுடன், நெல்மணிகள்
விழுந்துவிடாமல் காக்கும். இந்த வகையான மாலைகள் செய்வதற்கு குறைந்தது
ஐந்துகிலோ நெல் தேவைப்படுமாம்.

இன்னொரு வகையான மாலை லவங்க மாலை. இந்த மாலை செய்வதற்கு குறைந்தது 3 கிலோ
லவங்கமும் ஏலக்காயும் தேவைப்படுமாம். லவங்கத்துடன் ஏலக்காயை சேர்த்து
மல்லிகைமொட்டு போல் செய்யப்பட்டுப் பின்னர் மாலையாக கட்டப்படுகிறது.
திருநெல்வேலி மலைச்சரிவுகளில் லவங்கம் அதிகமாக கிடைப்பதால் கச்சாப்பொருள்
பிரச்சினை இல்லை.

மற்றொரு வகை மாலை ஜவ்வாது சந்தன மாலை. மனம் மயக்கும் வாசனையை
தனக்குள்ளே வைத்திருக்கும் சிறப்புக்குரியது இந்த மாலை. ஜவ்வாது கலவை
சிறிய துளைகளுடன் கூடிய மணிகளாக உருவாக்கப்படுகிறது. மணிகள் நன்கு
உலர்ந்ததும் பல வரிசைகளாகக் கட்டி ஜரிகைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஜவ்வாது மாலைகள் அரச குடும்பங்களின் சொத்தாகவே இருந்தன. தங்கள்
உடைகளை வாசனையாக வைத்திருக்க அரச குடும்பத்தினர் இந்த
ஜவ்வாது மாலைகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் மாலைகள் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
லவங்க மாலைகள் 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
பல நூறு ஆண்டுகளாக தஞ்சை அரச குடும்பத்தின் ஆதரவுடன் வளர்ந்த இந்தக் கலை
இப்போது நலிவடைந்து கொண்டே வருகிறது. பாரம்பரியமாக இந்த மாலையை
கட்டிவந்தவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

மாலைக்கே மாலை போடும் காலம்!

தகவல்:மு.குருமூர்த்தி

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்

தஞ்சாவூர் பெரிய கோவிலின் முகமண்டபத்து வாயிலில் உள்ள துவார பாலகர் சிலை காட்டும் தத்துவம் அற்புதமானது.துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. யானையை விழுங்கும் பாம்பின் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பாம்பு சுற்றியிருக்கும் துவாரபாலகரின் கதாயுதத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கதாயுதத்தை காலில் அழுத்திக்கொண்டிருக்கும் துவாரபாலகரின் உருவம் எவ்வளவு பெரியதாக இருத்தல் வேண்டும்?

அந்த துவாரபாலகரே "உள்ளே இருக்கும் ஈசனார் மிகப்பெரியவர்" என்று விஸ்மய முத்திரை காட்டுகிறார்.

தர்ஜனி முத்திரையால் நம்மை எச்சரிக்கை செய்கிறார்.

அபய முத்திரையால் ஈசன் கருணைமிக்கவர் என்று உணர்த்துகிறார்.

பரமசிவனாகத் திகழும் பரம்பொருளின் பேராற்றலை சிற்பவாயிலாக உணர்த்தும் வடிவ அமைப்புதான் தஞ்சாவூர் பெரிய கோயிலின் துவாரபாலகர் சிலைகள்.

ஆதாரம்:குடவாயில் பாலசுப்ரமணியனின் "தஞ்சாவூர்"
தகவல்: மு.குருமூர்த்தி