Monday, June 9, 2008
தஞ்சாவூர் மாலைகள்(THANJAVUR GARLANDS)
தஞ்சாவூர் மாலைகள்.
தஞ்சாவூர் மாலைகள் பெரும்பாலும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடியவை.
இதில் நெல்மாலை என்பது ஒரு வகை. இது ஒரு சுள்ளியின் துணையோடு கட்டப்படுவது.
நடுவே ஒரு சுள்ளியையும் இரு புறங்களிலும் நெல்மணிகளையும் பட்டுநூல்
கொண்டு இணைத்து முடியப்படுகிறது. தேவையான அளவில் அட்டையை வெட்டி
எடுத்து நெல்மணிகள் இணைக்கப்பட்ட சுள்ளிகளை அதில் வைத்து தைத்து
விடுகின்றனர். அதன்மேல் ஜரிகையைக்கொண்டு வேலைப்பாடுகள் செய்துவிடுகின்றனர்.
இந்த ஜரிகைகள் சூரத்தில் இருந்து தருவிக்கப்படுகின்றன.
இதனையடுத்து பல வண்ணங்களில் பதக்கங்கள் செய்து மாலைகளை இணைக்கப்
பயன்படுத்துகின்றனர். பதக்கங்களில் தங்கம்போல் ஜொலிக்கும் கயிறும்
அவற்றில் கோர்க்கப்படும் மணிகளும் மாலையை மேலும் அழகுபடுத்துவதுடன், நெல்மணிகள்
விழுந்துவிடாமல் காக்கும். இந்த வகையான மாலைகள் செய்வதற்கு குறைந்தது
ஐந்துகிலோ நெல் தேவைப்படுமாம்.
இன்னொரு வகையான மாலை லவங்க மாலை. இந்த மாலை செய்வதற்கு குறைந்தது 3 கிலோ
லவங்கமும் ஏலக்காயும் தேவைப்படுமாம். லவங்கத்துடன் ஏலக்காயை சேர்த்து
மல்லிகைமொட்டு போல் செய்யப்பட்டுப் பின்னர் மாலையாக கட்டப்படுகிறது.
திருநெல்வேலி மலைச்சரிவுகளில் லவங்கம் அதிகமாக கிடைப்பதால் கச்சாப்பொருள்
பிரச்சினை இல்லை.
மற்றொரு வகை மாலை ஜவ்வாது சந்தன மாலை. மனம் மயக்கும் வாசனையை
தனக்குள்ளே வைத்திருக்கும் சிறப்புக்குரியது இந்த மாலை. ஜவ்வாது கலவை
சிறிய துளைகளுடன் கூடிய மணிகளாக உருவாக்கப்படுகிறது. மணிகள் நன்கு
உலர்ந்ததும் பல வரிசைகளாகக் கட்டி ஜரிகைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஜவ்வாது மாலைகள் அரச குடும்பங்களின் சொத்தாகவே இருந்தன. தங்கள்
உடைகளை வாசனையாக வைத்திருக்க அரச குடும்பத்தினர் இந்த
ஜவ்வாது மாலைகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் மாலைகள் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
லவங்க மாலைகள் 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
பல நூறு ஆண்டுகளாக தஞ்சை அரச குடும்பத்தின் ஆதரவுடன் வளர்ந்த இந்தக் கலை
இப்போது நலிவடைந்து கொண்டே வருகிறது. பாரம்பரியமாக இந்த மாலையை
கட்டிவந்தவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
மாலைக்கே மாலை போடும் காலம்!
தகவல்:மு.குருமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment