Sunday, May 18, 2008

தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...

தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும்.
சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப் பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன்கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல்கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும்.
மைய உருவம் கரும் பச்சை, திட நீலம் அல்லது ஒளிர் சிவப்பு ஆகிய பின்புல வண்ணங்கொண்டு சமைக்கப்படும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை நிறங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாக தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும்.
திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தைக் கட்டும்.தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன.
பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் சரிகை திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.தஞ்சாவூர் ஓவியங்களில் நாம் அதன் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகைகளை ஒருங்கிணைத்து, புளியங்கொட்டையை அரைத்துக் கிடைக்கும் பசைகொண்டு பலகையின் மேல் தடிமனான அட்டையை பிசிர் இன்றியும், காற்றுக்குமிழ் இல்லாதவாறும் ஒட்டுவார்கள்.
நன்கு காய்ந்த பலகையின் மீது இரண்டு அடுக்குகளாக துணியை ஒட்டிக் காயவைப்பதுடன் முதல்நிலை முடியும். பொடி செய்யப்பட்ட கல்லுடன் கிளிஞ்சலைப் பொடி செய்து கிடைக்கும் சுண்ணாம்பை நன்கு கலந்து, அதில் கோந்து சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து, பலகையின் மேல் இரண்டு மூன்று முறை பூசுவார்கள். வழுவழுப்பான கல்கொண்டு பலகையின் பரப்பை நன்கு தேய்த்து தடையற்ற வழுவழுப்பான தளமாக ஆக்குவார்கள். படைக்கப்போகும் ஓவியம் திடமாக அதில் அமரத்தான் இத்தனை முன் ஏற்பாடுகள்.முன்பே தாளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களை கித்தான் பரப்பில் பொருத்தி, அதன்மேல் விளம்பிப் பதிவெடுப்பார்கள். அதில் அனைத்து வடிவங்களின் கோடுகளும் இடம்பெறும். பின்பு தூரிகைகொண்டு வடிவங்களை வண்ணத்தால் வரைந்துகொள்வார்கள்.கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியை பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசி சிறிதுபோல புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையை திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்கு பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள்.

மிகையான ஒளிரும் வண்ணங்கள்கொண்டு இவை படைக்கப்பட்டதற்கு, இந்த ஓவியங்கள் பெரும்பாலும் ஒளி குறைந்த பூஜை அறைகளிலும், கோயில் மண்டபங்களிலும் பார்வையிலிருந்து விலகியும் இருந்ததைக் காரணமாகச் சொல்லலாம்.

தகவலும் படங்களும்:இணையத்திலிருந்து
தொகுப்பு:மு.குருமூர்த்திcauverynagarwest@gmail.com

Saturday, May 10, 2008

மன்சூர் தர்காவிற்கு இந்துக்களின் நன்கொடை...MANZUR DURGAH OF THANJAVUR

தஞ்சாவூரில் நாயக்கர்களின் ஆட்சி மலர்ந்த ஆண்டு 1535. பேரரசர் அச்சுத தேவராயர் அவருடைய மனைவியின் தங்கை மூர்த்தி மாம்பா எனும் மூர்த்தி அம்மாவின் கணவரான செல்வப்பநாயக்கரை சோழநாட்டின் ஆட்சியாளராக (மகாநாயன்காரர்) நியமித்தார்.

1535 லிருந்து 1564வரை செல்வப்ப நாயக்கர் தனியாகவும், பின்பு அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கருடன் இணைந்து 1590 வரையும் ஆட்சிசெய்தார்.
செல்வப்பநாயக்கரின் கல்வெட்டுத்தூண் தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில் முக்கிய நினைவுச்சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் இன்றும் உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாக சாசன நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது 1550 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கிரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செல்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார். அதன்படி

1. சிலம்பா மண்ணையார்
2 .வேல் மண்ணையார்
3. கோபால் மண்ணையார்
4. தம்பா மண்ணையார்
5 ........... மண்ணையார்


என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கல்வெட்டு செல்வப்ப நாயக்கரின் சமயப்பொறையையும் அக்காலத்தில் நிலவிவந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆதாரம்: குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தஞ்சாவூர்"

Friday, May 2, 2008

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES





தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஒருலட்சம் பக்தர்கள் தீ மிதித்தார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை கீழக்காடு அருள்மிகு தீக்குதித்த அம்பாளுக்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com