Saturday, May 10, 2008

மன்சூர் தர்காவிற்கு இந்துக்களின் நன்கொடை...MANZUR DURGAH OF THANJAVUR

தஞ்சாவூரில் நாயக்கர்களின் ஆட்சி மலர்ந்த ஆண்டு 1535. பேரரசர் அச்சுத தேவராயர் அவருடைய மனைவியின் தங்கை மூர்த்தி மாம்பா எனும் மூர்த்தி அம்மாவின் கணவரான செல்வப்பநாயக்கரை சோழநாட்டின் ஆட்சியாளராக (மகாநாயன்காரர்) நியமித்தார்.

1535 லிருந்து 1564வரை செல்வப்ப நாயக்கர் தனியாகவும், பின்பு அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கருடன் இணைந்து 1590 வரையும் ஆட்சிசெய்தார்.
செல்வப்பநாயக்கரின் கல்வெட்டுத்தூண் தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில் முக்கிய நினைவுச்சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் இன்றும் உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாக சாசன நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது 1550 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கிரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செல்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார். அதன்படி

1. சிலம்பா மண்ணையார்
2 .வேல் மண்ணையார்
3. கோபால் மண்ணையார்
4. தம்பா மண்ணையார்
5 ........... மண்ணையார்


என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கல்வெட்டு செல்வப்ப நாயக்கரின் சமயப்பொறையையும் அக்காலத்தில் நிலவிவந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆதாரம்: குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தஞ்சாவூர்"

No comments: