Friday, October 10, 2008

கும்பகோணம் பூரியும் பாசந்தியும் (KUMBAKONAM0



கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு முகவுரை தேவையில்லை.
இசைக்கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் பிடித்துப்போன புண்ணிய பூமி இது.
கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப்புகையிலை, வாசனை சுண்ணாம்பு, ஊதிபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாம் கலந்த ரம்மியமான மணம் நிறைந்த ராமசாமிகோயில் சன்னதித்தெருவில் ஒரு முக்கியமான கடை "முராரி ஸ்வீட்ஸ்" இந்தக்கடையின் வயது 93.
கும்பகோணத்திற்கென்று தனியாக ஒரு சாப்பாட்டு புராணம் எழுதலாம். தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளைக்கு வெங்கடா லாட்ஜ் அல்வா என்றால் உயிர். பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம் பிள்ளையும், நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தேடிப்போவது பசும்பால் பஞ்சாமி அய்யர் காப்பிக்கடையைத்தான்.
எழுத்தாளர் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோருக்கு காந்திபூங்காவில் சந்திப்பு. சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு இட்லி வேண்டும். மங்களாம்பிகாவில் இட்லி சாப்பிடணும். கூடவே மிளகாய்ப்பொடியும் வேண்டும்.
கலைஞர்கள் வயிறு நிறைந்தவுடன் மறக்காமல் சமையல் கலைஞர்களை பாராட்டிவிட்டுச்செல்வார்கள். கும்பகோணத்திற்குரிய பண்பு இது.
நம்முடைய பூரி-பாசந்தி கதையைப் பார்ப்போம்.
நம்முடைய உணவில் பூரி அண்மைக்கால வரவு. ஆரம்பத்தில் நயமான கோதுமையில் பிறப்பெடுத்த பூரி இப்போது மைதாவில் அடைக்கலமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசந்தி துணைக்கு வந்தது. இப்போதெல்லாம் பூரி என்றவுடன் அடுத்தசொல் உருளைக்கிழங்கு என்றுதான் வாயில் வருகிறது.
பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல்நிற பாசந்தி பிறப்பெடுக்கும். சுடச்சுட கோதுமைப் பூரியைப்பிய்த்து பாசந்தி பாலேட்டில் தொட்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே...ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்.
ஆனால் கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸில் இன்றும் பூரி பாசந்தி கிடைக்கிறது. பூரிக்கு தொட்டுக்கொள்ள, கேட்டால் பாசந்தி தருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தைச்சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரிலால் சேட் 1915ல் தொடங்கிய கடை இது. இப்போது அவருடைய மகன்களின் நிர்வாகத்தில் கடை நடைபெறுகிறது.
பூரி-பாசந்திக்கு பக்குவம் என்ன?
கடைக்காரரின் பதில்:
"பத்து பங்கு பால். அரைப்பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப்பங்கு பாலாடையாக சுண்டவேண்டும். இறக்கும் பதத்தில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளுங்கள். பாசந்தி ரெடியாகிவிடும். நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர்விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷம் ஈரத்துணிபோட்டு போர்த்தி புளிக்கவிட்டு போட்டு எடுத்தால் பூரியும் தயாராகிவிடும்."
பூரியை பிய்த்து பாசந்தியில் தொட்டு வாயில் வைத்தால் கரைந்து வயிற்றுக்குள் இறங்கும் அனுபவம் ஒரு ஆனந்தம்.
ஆமாம், நீங்கள் நினைப்பதுதான் சரி.
கும்பகோணத்தில் எல்லாக்காலங்களிலும் அற்புதக்கலைஞர்கள் யாராவது இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி: தினமணி
தகவல்: மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

No comments: