Monday, March 10, 2008
முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் MUTHUPET LAGOON
சென்னைக்கு தெற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரைக்கு அருகில் முத்துப்பேட்டை உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவு. சாலை வசதியும், தொடர்வண்டி வசதியும் உண்டு.
காவிரி வடிநிலத்தின் தென்முனைதான் இவ்வூரின் இருப்பிடம். காவிரியாற்றின் 6 கிளை ஆறுகள் முத்துப்பேட்டை பகுதியில் கடலுடன் கலந்து இரண்டு மிகப்பெரிய கடற்கழிகளை உருவாக்கியுள்ளன. படகு சவாரிக்கு ஏற்ற இடங்கள் இவை.
மேற்கே அதிராம்பட்டினத்திலிருந்து கிழக்கே கோடியக்கரைவரை காடுகளின் ஆதிக்கம்தான். தெற்கே பாக்நீரிணைப்பும், வடக்கே சேறும் சகதியும் நிறைந்த நிலப்பரப்பும் விளிம்புகட்டிநிற்கின்றன.
கடலுக்குள் ஆறுகள் சேரும் முன்பாக பல லகூன்கள் உண்டாகியிருக்கின்றன. லகூன்களின் கரையில் காணப்படும் காடுகள் தான் மாங்ரோவ் காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள்...........அலையாத்தி மரங்கள் நிறைந்திருப்பதால் இந்தப்பெயர். கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிலத்தைக்காப்பதால் காலம் காலமாக நிலவிவரும் தமிழ்ப்பெயர்.
முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.
13,000 ஹெக்டேரில் பரந்துவிரிந்திருந்த முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் இப்போது இருப்பது வெறும் 5,800 ஹெக்டேர் மட்டும்தான்.
காரணம்?
........இது என்ன கேள்வி?
....... மனிதன் தான்.
அலையாத்திக்காடுகள் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் காணப்படும் இயற்கையின் அற்புதம். மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் கூட.
உப்புநீரிலும் கடற்கழிகளிலும் வளரக்கூடிய வெப்பமண்டல காடுகள் இவை . இவற்றிற்கென சிறப்பான பண்புகள் உண்டு. அலையாத்தி மரங்கள் வேர்களால் சுவாசிக்கக்கூடியவை. வேகமாக வளரக்கூடியவை. இந்தக் காடுகளை வளர்த்தெடுக்க பெரும் பொருட்செலவு தேவையில்லை.
கடற்கரையை மண் அரிப்பிலிருந்தும் புயற்காற்றிலிருந்தும் அலையாத்திக்காடுகள் பாதுகாக்கின்றன என்பது பயனுள்ள செய்தி.
பல்வேறு காரணங்களால் முத்துப்பேட்டை அலையாத்திகாடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்தக்காரணங்கள் அனைத்தும் மனிதர்களால் ஏற்பட்டது என்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம்.
புதுப்புது இறால் பண்ணைகள், உப்பளங்கள் இவையெல்லாம் அலையாத்திக்காடுகளைச்சுற்றி முளைத்துவருகின்றன.
1986ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களோடு 1996ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பாருங்கள். மனிதர்கள் அலையாத்திக்காடுகளின் பரப்பளவைக்குறைக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
அலையாத்திக் காடுகளின் நீர்ப்பரப்பில் நீரின் இயல்பியல் வேதியியல் பண்புகள் மாற்றமடைந்துள்ளன என்பது ஆய்வுகளின் முடிவு. நச்சுத்தன்மையுள்ள கழிவுகள் கடல்நீரில் கலப்பதன் விளைவு இது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனால் மீன்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உணவுச்சங்கிலியின் ஒரு அற்புதமான கண்ணி இந்த அலையாத்திக்காடுகள். தாவரங்களின் மிச்சசொச்சங்கள் எல்லாம் மீன்கள், நண்டுகள், சிப்பிகள் இவற்றிற்கு உணவாகின்றன.
அலையாத்திக்காடுகளின் மதிப்பை நாமெல்லாம் மிகவும் காதலிக்கும் அமெரிக்க டாலரில் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஹெக்டேருக்கு ஓராண்டிற்கு 11,819 டாலர்கள்!
நெல்விளைச்சலின் மதிப்பைப்போல 10 மடங்கு!
ஆனால் விறகுக்காகவும் கால்நடைகளின் தீவனத்திற்காகவும் இந்தக் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியானது.
காலந்தாழ்த்தியாவது விழித்துக்கொண்ட வனத்துறை அலையாத்திக்காடுகளை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
1986க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் முத்துப்பேட்டையில் மட்டும் சுமார் 20ஹெக்டேர்
அலையாத்திக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவான சேதாரம்தான்,.
வனத்துறையின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெகுமதி என்றும் கொள்ளலாம்.
அலையாத்திக்காடுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு குரல்கொடுக்கும் அனைவருக்கும் நாம் தோள்கொடுப்போம்!
நண்பர்களே! அலையாத்தி காடுகளைப்பற்றிய கூடுதல் விவரங்களை அறியத்தாருங்கள்.
ஆக்கம்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்பிற்கினிய குருமூர்த்திசார்,
தஞ்சாவூரைப்பற்றிய மிக அற்புதமான வலைப்பூவாய் இது வளர்ந்து வருவது கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது
அன்புடன் புகாரி
அன்பின் நண்ப குருமூர்த்தி,
தனியாளாய் தகவல்கள் சேக்கரித்து வலைப்பூவினை வளர்க்கும் இனிய பணிக்கு பாராட்டுகள்.
தமிழ் மணத்தில் இணைத்தாயிற்றா ? பலரும் படிக்க வசதியாயிருக்கும்.
நண்ப,
நான் முத்துப் பேட்டைக்கு 4 நாட்கள் விடுமுறையில் வந்துள்ளேன். சுற்றி உள்ள தலங்களை எல்லாம் சுற்றுலாவாகச் சென்றிருக்கிறேன். நினைவில் பசுமையாக இருக்கிறது.
எனது சொந்த ஊரான முத்துப்பேட்டையின் சிறப்புக்களை பற்றி எழுதியதியதற்கும் கண்முன்னே சில காட்சிகளை காணத்தந்தமைக்கும் என் கோடி நன்றிகளுடன் உங்களுடைய இந்த தஞ்சைப்பற்றி வலைப்பூ மென்மேலும் சிறப்புற்று விளங்க வாழ்த்துக்கள் ஐயா..
பதிவிற்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி
Post a Comment