

நாகசுரம் ராஜவாத்தியம் எனப்படுகிறது.
ஆறுகால பூஜைகளிலும் இந்த நாகசுரம் வாசிக்கப்படுகிறது.
விடியற்காலத்தில் பூபாளமும்
காலையில் மலையமாருதமும்
உச்சிக்காலத்தில் சுருட்டி மத்யமாவதி ராகங்களும்
மாலைப்பொழுதில் கல்யாணி, பூர்வி கல்யாணியும்
முன் இரவிலும்
அர்த்த ஜாமத்திலும் நீலாம்பரியும்
கோவில்களில் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன.
தற்போது வாசிக்கப்படும் நாகசுரம் பாரி நாகசுரம் எனப்படும்.
இதனை வடிவமைத்து உருவாக்கிய பெருமை கும்பகோணம் அருகில் உள்ள
நரசிங்கம்பேட்டையைச்சேர்ந்த மறைந்த என். ரங்கநாத ஆசாரியாரையே சேரும்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் உத்திரங்களாக பயன்படுத்தப்பட்ட
நன்கு உலர்ந்த ஆச்சா மரத்தில் இருந்துதான் இந்த பாரி நாகசுரம் உருவாக்கப்படுகிறது.
நாகசுரம் சீவாளி கெண்டை, உலவு எனப்படும் நீண்ட பாகம், அணசு போன்ற பாகங்களைக்
கொண்டதாகும். சுமார் 2.5 அடி நீளம், 2 அங்குல அகலம் கொண்ட உருண்டை வடிவ உலவு
பகுதியை சிறிதும் பெரிதுமான-பெருக்களவு, அடுக்களவு, கொத்து- பல்வேறு கூரிய வாள்
போன்ற இரும்புக்கம்பிகளைக்கொண்டு கடைந்து பெரிய துவாரத்தை உருவாக்குகின்றனர்.
முதன்மை சுரங்களுக்காக நேர்கோட்டில் 7 துளைகளும், காற்றை வெளியேற்றுவதற்காக
அடிப்பகுதியில் பக்கத்திற்கு இருதுளைகள் வீதம் நான்கு துளைகளும், நடுப்பகுதியில் ஒரு
துளையுமாக மொத்தம் 12 துளைகள் இடப்பட்ட குழல் பகுதி உருவாக்கப்படுகிறது.
அடியில் புனல் வடிவில் அணைவுக்காக இணைக்கப்படும் அணசு, வாகை மரத்தில் தயாரிக்கப்
படுகிற்து.
ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாக
பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம்
தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகசுரக்கருவிகளை நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.
-கலை விமரிசகர் தேனுகா-தினமணியில் எழுதிய கட்டுரையில் இருந்து...
தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com