Saturday, March 29, 2008

தஞ்சாவூர் பீரங்கி -Canon of Thanjavur-

கி.பி. 1600க்கும் 1645க்கும் இடைப்பட்ட காலத்தில் இரகுநாத நாயக்கரின் காலத்தில் தஞ்சையில் செய்யப்பட்ட இந்த பீரங்கி தஞ்சாவூர் நகரத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் படைக்கலன்களில் முதன்மையாக இருந்ததால் உள்ளூர்மக்கள் 'இராஜகோபாலா' என்று இறைவனின் பெயரிட்டு அழைத்துவந்துள்ளனர். தஞ்சாவூர் கீழவாசலில் இப்போதும் முதன்முதலாக நிறுவப்பட்ட திசையிலேயே இந்த பீரங்கி இருக்கிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் இது பாதுகாக்கப்பட்டுவருகிறது. தஞ்சாவூர் அரண்மனையைப் பற்றிய ஒரு நூலில் நெருப்பைக்கக்கும் குழாய்வடிவ ஆயுதம் இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள மானோஜிப்பட்டி கிராமத்தில் இரும்பு உலைக்கொல்லர்கள் இருந்ததாகவும் இந்த பீரங்கி அங்கே செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
நூர்வார், மூஷிராபாத், டாக்கா, பிஷ்ணுபூர்,பீஜப்பூர், குல்பர்கா, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மட்டுமே Forgewelding தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பீரங்கிகள் உள்ளன. 'Forgewelding' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பீரங்கிகளில் உருவத்திலும் எடையிலும் தஞ்சாவூரில் உள்ள பீரங்கிதான் உலகிலேயே முதலிடத்தை வகிக்கிறது என்பது ஒரு சிறப்பு.

Forgewelding என்றால் என்ன?
ஒரு உலோகத்தை சூடாக்கும்போது வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவுடன் உள்ள ஈர்ப்புவிசையை இழந்துவிடுகின்றன. சரியான வெப்பநிலையில் மற்றொரு உலோகத்துடன் அழுத்தம் கொடுத்தால் இரண்டு உலோகத்துண்டுகளிலும் உள்ள எலெக்ட்ரான்கள் குறுக்குப்பாய்ச்சல் செய்து பிணைந்து கொள்கின்றன.
இந்த பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைப்பற்றி சரியான தகவல் இல்லை. எனினும் கணக்கீட்டின்படி இரும்புகுண்டுகளாக இருப்பின் 1,000 கிலோகிராம் என்றும், கல் உருண்டைகளாக இருப்பின் 300 கிலோகிராம் என்றும் தெரியவருகிறது. இந்த பீரங்கியின் மொத்த எடை 22 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பீரங்கியைப்பற்றிய தொழில்நுட்பவிபரங்களை தெரிந்துகொள்ள விருப்பமா? மேலும் படியுங்கள்......
The Thanjavur iron cannon rests on three concrete supports, about 60 cm thick, 120 cm high, and 2.25 m apart from each other.
The cannon is a muzzle-loading type, wherein the gunpowder and the projectile object are loaded from the muzzle (i.e., front end).
The cannon is 751.5 cm in length from end to mouth, including the 31.5 cm projection at the end of the barrel. The outer and inner diameters of the gun barrel are 93 cm and 63 cm, respectively.
................ the minimum weight of the cannon is more than 22 t.
The front end of the cannon indicates that 39 iron strips were folded out from inside the cannon. Each strip is about 1.5 cm thick and 5 cm wide.

These iron staves continue longitudinally through the length of the inner bore of the barrel to provide a smooth inner surface to the cannon barrel.
The front end also reveals that concentric layers of iron rings were used to construct the barrel of the cannon.
Four concentric rings are clearly visible in the front plane of the cannon barrel.
The complete barrel is made up of three rings, hooped over the iron staves. A detailed dimensional analysis found that the width of the individual rings along the length of the cannon was not constant. Generally, rings of smaller widths were also located along the length of the cannon. In this regard, it is also important to note the systematic placing of smaller rings between larger rings at two specifi c locations, just behind the muzzle of the barrel and in the middle of the cannon. In these locations, the smaller rings seem to have been placed in a very calculated manner.Therefore, the design of the cannon required the use of smaller width rings not only to close the gaps between the larger width rings, but also to ensure greater toughness for the barrel.At periodic intervals along the length of the cannon, additional external rings are on the external surface of the cannon.(www.Lehigh.edu/~inarcmet)
எண்ணமும் எழுத்தும்:மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Tuesday, March 25, 2008

புகழ்பெற்ற மாணவர் விடுதிகள்-FAMOUS HOSTELS -ORATHANAD-RAJAMADAM

ஒரத்தநாடு, ராஜாமடம், நீடாமங்கலம், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களுடன் மாணவர் விடுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளுக்கு வயது 238 ஆண்டுகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! இவையனைத்தும் தஞ்சாவூரை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களின் மனைவிமார்களால் நிர்வாகம் செய்யப்பட்டதாக 1801ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் அரசர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் இருந்து தெரியவருகிறது.
இதைப்போன்றதொரு மாணவர் விடுதி 'சிரேஸ் மாணவர் இல்லம்' என்ற பெயரில் தஞ்சாவூர் அரசர் பள்ளியுடன் இணைக்கப்பட்டு இப்போதும் செயல் பட்டு வருகிறது.
இங்கு ஏழைமாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு கல்வியுடன், உறைவிடம், உணவு, மற்றும் இதர வசதிகள் அளிக்கப்படுவது சிறப்பு.
சத்திரம் இலாகாவின் நிர்வாகத்தில் செயல்பட்டுவருகின்ற இந்த விடுதிகளின் நிர்வாகத்தை செம்மைப்படுத்திய பெருமை நீதிக்கட்சியைச்சேர்ந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைச் சேரும். ராஜாமடம் மற்றும் ஒரத்தநாடு சத்திரம் விடுதியில் தங்கிப்பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தனியார் துறையிலும் இன்று உலகமெங்கும் விரவி இருக்கிறார்கள்.இந்த விடுதிகளின் காப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள், மற்றும்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நேரடி அனுபவங்கள் வருங்காலத்தில் இந்த வலைப்பூவில சேர்க்கப்படும்.உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர் எவராவது இந்த விடுதிகளுடன் தங்களுடைய நினைவை அல்லது தொடர்பை பகிர்ந்து கொள்ளக்கூடும்.
1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் மகாராஜா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் இந்த சத்திரங்களைப்பற்றிய சுவையான தகவல்களைத்தருகிறது.
இராமேஸ்வரம் செல்லும் பாதையில் இந்த சத்திரங்கள் அமைந்திருந்தன.
இராமேஸ்வரத்திற்கு யாத்திரை செய்வோருக்கு உதவிசெய்வதற்காகவென்றே இந்த சத்திரங்கள் செயல்பட்டன.
ஒவ்வொரு சத்திரத்திற்கும் இணைப்பாக பகோடாக்கள், அன்னதானக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
சத்திரங்களை நிர்வகிக்கும் செலவிற்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலங்கள் யாவும் மன்னரின் மனைவியர் பேரில் வழங்கப்பட்டிருந்தன.
மன்னரின் மனைவியர்களில் மிகவும் மூத்தவர் சத்திரநிர்வாகத்தின் பொறுபில் இருப்பார். அவர் இறக்கும்போது வரிசையில் உள்ள அடுத்த மூத்தவர் பொறுப்பிற்கு வருவார்.
சத்திரங்கள் யாவும் மன்னரின் வீட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டது.
சத்திரங்களில் அளிக்கும் தருமகாரியங்கள் யாவும் மன்னர் குடும்பத்தில் நடப்பவையாகவும், குடும்பகவுரமாகவும் கருதப்பட்டது.
தர்மகாரியங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலங்களில் அமைச்சர்களோ, அவர்களின் மகன்களோ, அவர்களின் வாரிசுகளோ தலையிட உரிமையில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் நாற்பதாயிரம் யாத்ரீகர்கள் இந்த பாதையில் இருவழிகளிலும் பயணம் செய்தனர்.
காசி, டெல்லி, ஒளரங்காபாத், பூனா இங்கிருந்தெல்லாம் யாத்ரீகர்கள் இந்த வழியே இராமேஸ்வரத்திற்கு சென்றுவந்தனர்.
பிராமணர்களில் இருந்து பறையர்கள்வரை ஜோகு, ஜங்கம், அதிதி, பைராகி ஆகிய எல்லோருக்கும் சமைத்தசோறு இங்கு வழங்கப்பட்டது.
சொந்தமாக சமைத்து சாப்பிட விரும்புவோருக்கு அரிசியும், மற்ற உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.
நள்ளிரவில் ஒரு மணி அடிக்கப்படும். அதுவரை இந்த உணவு வழங்கப்படும். அதுவரை உணவு வாங்கிக்கொள்ளாதவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக இந்த மணியோசையாம்.
யாத்திரையை தொடரமுடியாதவர்கள் சத்திரத்திலேயே விரும்பும்வரை தங்கிக்கொள்ளலாம்.
ஒவ்வோர் சத்திரத்திலும் நான்கு வேதங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் நியமிக்கப்பட்டார்.
வீக்கம், விஷக்கடி, மற்றும் நோய்கள் இவற்றை குணப்படுத்துவற்காக ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டார்.
சத்திரத்தில் தங்குவோர் தலைமை ஆசிரியரின் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டார்கள்.
சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பத்திய சாப்பாட்டுடன், கனிவான உபசரிப்பும், மருந்துகளும் வழங்கப்பட்டன. இறந்துபோனவர்களின் உடல்கள் அவர்களுடைய சாதி வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டன.
பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.
இதுதவிர நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேய்த்துக்குளிக்க எண்ணெயும்,
தேவைப்படும்போது மருத்துவ வசதியும், துணிமணிகளும் வழங்கப்பட்டன.
மேலும் படிக்கவிரும்பும் ஆசிரியர்களுக்கு தேவையான நூல்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் கற்றுத்தேர்ந்தபிறகு அவர்களுடைய திருமண செலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த சத்திரங்களில் கைக்குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிப்பெண்கள் கனிவுடன் பரிபாலிக்கப்பட்டனர்.
சத்திரத்தில் இருக்குபோது பிரசவம் நடந்தால் செலவுமுழுவதும் சத்திரநிர்வாகத்தினுடையது
அவர்களுக்குத்தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு மூன்றுமாதங்கள்வரை சத்திரத்தில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். தந்தையை இழந்த பிராமணச்சிறுவர்கள் வறுமையின்காரணமாக பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தப்படாமல் இருந்தால் நிதிஉதவி அளிக்கப்பட்டது.
சத்திரத்திற்கென வழங்கப்பட்ட நிலங்கள் வளம் குன்றியவையாக இருந்தன.
இந்த நிலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் எந்தக்காலத்திலும் அரசாங்க வருமானமாக கருதப்படவில்லை என்பது மராட்டிய அரசர்களின் கொடைத்தன்மைக்கு சான்று.
மேலும் இந்த சத்திரங்களில் அளிக்கப்பட்ட தரும காரியங்களுக்கு எந்த விதமான பங்கமும் ஏற்படக்கூடாது என்பதில் மராட்டிய அரசர்கள் வெகு கவனமாக இருந்திருக்கின்றனர்.
பஞ்சம் ஏற்பட்டு சத்திரத்திற்கு வருவாய் அளித்துவந்த நிலங்கள் சரியாக விளையாமற்போகும் காலங்களில் வேறு அரச வருமானங்களில் இருந்து சத்திரங்களின் பரிபாலன நிதி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் வெள்ளையர் ஆட்சிக்கு வந்தபிறகு, பஞ்சம் காரணமாக இந்த சத்திரங்களுக்கு வெள்ளை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அதிகாரம் இழந்த தஞ்சை மராட்டிய அரசர் எழுதிய கடிதத்தை கண்ணீருடன் தான் நாம் படிக்கவேண்டும்.
"As the lands annexed to the chetrums is in general very poor, it happens frequently
from a deficiency of rain, that they do not produce sufficient for the expences.
When this is the case my anxiety to prevent any diminution of these excellent charities, which I consider
as the most honourable appendage of my dignity, has always induced me to send to them
from the circuar both grain and money sufficient to make up the deficiency. After Mr.
Harris was appointed to the management of that soubah, he must remember that I applied to
him for a considerable quantity of paddy at different times for the use of the chetrums.
The chetrums are not of recent foundation. The chetrum of Munmaligoody and
some others were founded by my ancestor Pretaupsing above forty years ago, and have
continued to distribute their charities ever since. My father the late Tulsagee Rajah, twenty five
or thirty years ago founded the chetrums of Minmushale, Salutehnahoapoor, and Rajyamul.
None of these chetrams were founded in the reign of Amersing or by me since my accession.
Although these charitable institutions did not originate with me, I consider them as attached to
my house, and essential to my reputation and happiness. The Tanjore country is celebrated
over all world for its charities, it is called Dhermraje, and I consider the reputation which
reverts upon me through all countries from this appellation, as the most honorable
distinction of my rank. The revenues appropriated to the support of the charities of my
ancestors, and my Tulsajee Rajah, have never been included in the public revenue of the
country. They invariably cherished and supported the charities. It is my earnest wish to
do the same. The superintendence of them has always descended from the older to the
younger queen. It has remained in the hands of the senior until her death and then
descended to the wife of the reigning Rajah. I have a perfect confidence that this custom of
my ancestors will not be deviated from , and that I shall not suffer the disgrace of seeing it
abolished in my reign.
The perwangys issued by Pretaupsing and Tulsajee previous to the capture of the fort
cannot be found. After the capture of the fort the Nabob plundered the place, and carried off all
the records, in the the dufter. From this circumstance no records prior to that date remain.
After the restoration of the fort, the late Tulsajee Rajah issued new perwangee for all the ancient
charitable institutions as well those established by himself. These are in my possession.
There is a regular grant also for Chetoobaba chetrum.
What can I write more.
20th January 1801

எண்ணமும் எழுத்தும்: மு.குருமூர்த்தி,
cauverynagarwest@gmail.com

Saturday, March 22, 2008

திருவையாற்றில் நாட்டுப்புற இசை விழா THIRUVAIYARU FOLK FESTIVAL

கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஆட்சி செய்துவந்த கிராமீயக்கலைகள், தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களின் வரவால் ஆதரவை இழந்துவருகின்றன.

கிராமீயக்கலைகளை பாதுகாப்பதும் அதை ஒரு ஜீவனமாக ஏற்று வாழும் கலைஞர்களை ஆதரிப்பதும்கூட தமிழ்மொழி வளர்ச்சியின் ஒரு அங்கமல்லவா?........
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் செயல்பட்டுவரும் தமிழக நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம், கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டுப்புற இசைக்கலைத் திருவிழாவை நடத்திவருவது தமிழர்களுக்கு பெருமை தரும் செய்தி பத்தாம் ஆண்டு நிகழ்ச்சிகள் திருவையாறு அரசர் கல்லூரித்திடலில் 14,15.03.2008 ஆகிய இருநாட்களிலும் நடைபெற்றன. மாமன்றத்தின் அமைப்புச்செயலாளர் திரு.தெ.தமிழ்ச்செல்வன் நாம் கேட்ட விவரங்களைக்கொடுத்தும் அரிய புகைப்படங்களை தந்தும் உதவினார்.
மாமன்றத்தின் தலைவர் திரு.ஆண்டவர் கோவி.கணேசமூர்த்தி வாழ்த்துக்கூறி திருவையாறு நாட்டுப்புற இசை விழாவை ஆவணப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக நாட்டுப்புறவியல் சிறப்பு ஆய்வுக்கருத்தரங்கம், தமிழக நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி என்று இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா ஏராளமான பொதுமக்களையும் அறிஞர் பெருமக்களையும் கவர்ந்திழுத்தது.
இந்த அரிய முயற்சிக்கு தென்னக பண்பாட்டு மையம், கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், அரசர் கல்லூரி, அரசு இசைக்கல்லூரி ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்து நின்றன.
தஞ்சாவூரின் மண்வாசனை மணக்க எருதுபூட்டிய கலப்பையுடன் நெற் கதிர்களைச்சுமந்து பெண்களும் கரும்புக்கட்டுடன் விவசாய பெருங்குடி மக்களும், நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து பேரணியில் பங்கேற்றனர்.
நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு போதுமான ஆதரவின்மையால் கலைஞர்களுடன் கலைகளும் அழிந்து வருவது மிகவும் வருத்ததிற்குரியது. தற்போதுள்ள நாட்டுப்புற கலைகளும் அவற்றைப்போற்றி வாழும் கலைஞர்களும் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள இந்த பேரணி உதவியது......
கொம்பு வாத்தியம் திருப்பழனம் மா.சமுத்திரம்-
பொய்க்கால் குதிரை,
கரகம்,மயில்,மாடு எ.செல்வராஜ்-
பேண்டு இசைக்குழு
மற்றும் செட்டியார்
பொம்மைகள் அலெக்ஸ் குழுவினர்-
நையாண்டிமேளம்,
கரகம்,மயில்,மாடு சர்க்கரை குழுவினர்-
நையாண்டிமேளம்,
கரகம்,மயில்,மாடு மாணிக்கம் குழுவினர்-
புலியாட்டம் சேட்டுக்குழுவினர்-
தப்பாட்டம் திருமானூர் குமார் குழுவினர்-
காளியாட்டம் துறையூர் முத்துக்குமார் குழுவினர்-
சிலம்பு, சுருள், மடுவு திருவையாறு தர்மராஜ் குழுவினர்-
அடியா இடியா தப்பாட்டம் மேல உத்தமநல்லூர் குழுவினர்-
கரகம், கோலாட்டம்,
கும்மியாட்டம் புனல்வாசல் ஆ.தி.ந.பள்ளி மாணவ மாணவிகள்-
சிலம்பாட்டம், மடுவு,
ரெட்டைக்குச்சி, குஸ்தி,
பிரிவரிசை, தீப்பந்தம் கடுவெளி நாகநாதன், கலைப்புலி கோவிந்தன்,
முகம்மது பந்தர் தாவூத் பாட்சா, தஞ்சை அப்துல்
கலிம், வலங்கைமான் ஆரோக்கியசாமி, தனபால்-


நாட்டுப்புற கலைகளைப் போற்றி வாழும் சில கலைஞர்களின் பெயர்கள்தான் இவை. இன்னும் ஏராளமானோர் நாட்டுப்புறக்கலைகள் அழிந்துவிடாமல் அவற்றை வாழ்க்கையாகவே கொண்டிருக்கின்றர். அவர்கள் சொல்லுவதையும் கேட்போமே!
சமகால பாவைக்கூத்துக்கலைஞர் கும்பகோணம் சங்கரநாதன் கூறுகிறார்.......
அசலான கலைஞன் இருந்தும் கூத்து தன்னுடைய பழைய களையை இழக்க காரணம் என்ன?
அவருடைய பதிலை படியுங்கள்......

"கலையை எப்போதும் கலைஞன் மட்டுமே முடிவு செய்வதில்லை. ரசிகனும் சேர்ந்தே முடிவு செய்கிறான். இன்றைக்கும் என்னால் விடிய விடிய கச்சேரி செய்யமுடியும். ஆனால் பார்க்க யார் இருக்கிறார்கள்? காலம் மாறிப்போய்விட்டது. அதற்கேற்ப நாங்களும் மாறித்தானே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் நாங்களும் அழியவேண்டும். இந்தக்கலையும் அழியவேண்டும். பாவைக்கூத்து என்பது பின்பாட்டும் உரையாடலும் மாறி மாறி மணிக்கணக்காக செய்யும் வேலை. எனக்கு 5,000 பாடல்கள் வரை மனப்பாடம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை. நிலைமை ஒவ்வொருநாளும் மோசமாகிக்கொண்டே போட்க்கொண்டிருக்கிறது. எனக்குத்தெரிந்த வித்தையில் பாதியே என் மகனுக்குத்தெரியும். இந்த மண்ணின் கலைகள் எல்லாம் வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இரவெல்லாம் கூத்து நடத்திய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் இரண்டுமணிநேரத்துக்குள் முடித்துவிடு என்கிறார்கள். பக்த பிரகலாதன் கதையில் ரஜனி, கமல் எல்லாம் கலந்து காமெடி செய்யச்சொல்லுகிறார்கள். நாங்களும் செய்கிறோம். ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை செய்வதுதானே கலை தர்மம்?"

எதையோ நினைத்துக்கொண்டவராக உயிரையே நிலைகுலையவைக்கும் குரலில் சங்கரநாதன் பாடத்தொடங்கினார்.

"காட்டுக்குப்போன என் கண்மணி
அந்தி நேரமாகியும் வீட்டுக்கு
வாரதைக்காணேன்
வேகுதன் உள்ளம் அய்யோ
மகனே......மகனே....!"


இரவு முடிந்தது. பொழுது விடிந்தது. பொம்மைகள் மனிதர்களாகவும், மனிதர்கள் பொம்மைகளாகவும் மாறிவிட்டிருந்தார்கள்.
கரகமாடும் மலைச்சாமி சொல்லுவதையும் கேளுங்கள்........

எம்.இ. பட்டதாரியான இவர் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் இவற்றில் மேடைநிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த இவரின் குரு கரகாட்டக்காரன் புகழ் லூர்துசாமி அய்யா மற்றும் கலைமாமணி வேலு அய்யா ஆகியோர். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளர்.
தற்போது தஞ்சாவூரில் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன் அவர்களின் ஆதரவுடன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
"நையாண்டி மேளத்துடன் கரகம் ஆடவேண்டும் என்பதே முறை. ஆனால் கால மாற்றமும் மீடியாக்களின் ஆதிக்கமும் நாட்டுப்புற கலைகளை சத்தமில்லாமல் அழித்துவருவது வேதனை அளிக்கிறது.நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையும், தரமும், பொருளாதாரமும் மேம்படவேண்டும். அரசும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், " என்கிறார் திரு. மலைச்சாமி.
பத்தாண்டுகளாக செயல்பட்டுவரும் திருவையாறு நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம் பல இடையூறுகளையும் தாண்டி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாட்டுப்புறக்கலையை ஆதரிப்பதோடு தங்களுடைய கடமை தீர்ந்துவிட்டது என்று எண்ணாமல் இக்கலையை வெளிஉலகத்திற்கு வெளிச்சம்போட்டுக்காட்டும் இதுபோன்ற மன்றங்களை சொல்லாலும் செயலாலும் ஆதரிக்கவேண்டும்.
தொடர்பு கொள்ள விழைவோர்:
தலைவர், தமிழக நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம், திருவையாறு- 613204, தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி எண்கள்:04362-260279, 260229,9443561776
தகவல்: மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Tuesday, March 18, 2008

மொய்விருந்து சாப்பிடலாம் வாங்க....MOI VIRUNDHU

நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?.............. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்........ இதுதான் மொய்விருந்து! அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.
புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?.... 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!
மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

ஒரு தாத்தாவும், பாட்டியும்..........
அவர்களுக்குப் பிள்ளையில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?...
ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்....... தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்.....பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.
திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.

மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை. அதில் காணப்படும் விவரங்கள் இப்பகுதியில் வாழும் மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைவெளிச்சம் போட்டுக்காட்டக்கூடியவை. என்னுடைய ஆசிரிய நண்பர் சித்துக்காடு திரு.அ.சண்முகம் அவர்கள் கைநிறைய அழைப்பிதழ்களை அள்ளித்தந்தார். இங்கேயிருக்கும் இரண்டு அழைப்பிதழ்களும் மொய்விருந்து பற்றிய ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை நமக்குத் தருகிறது. அவர் கூறிய விபரங்கள் மொய்விருந்து பற்றிய நீள்வெட்டுத்தோற்றத்தைத் தருகிறது.
கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.
உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்........

  • மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.
  • மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்......சினிமா கொட்டகை மாதிரி...... 'சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்' என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் 'பல ஊர்' என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.
  • உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?..... அதை 'தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்' என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.
  • மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.
  • பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.
    உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
  • கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.
    வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.
  • ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.
  • காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.
  • மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.
    அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.
  • மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.
    புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.
  • விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு 'பின்வரவு' என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.
  • 'நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா.......' என்று வரும் பணம் 'புதுநடை' என்ற தலைப்பில் எழுதப்படும்.
    அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.
  • குடும்பத்தகராறா?........இனிமேல் உறவுவேண்டாமா?......பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.
    மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?......கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?.......வழி இருக்கிறது......"இதை எழுதவேண்டாம்" என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.
  • ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.
  • பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?...........கவலைப்பட வேண்டியதில்லை.....உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் .........விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
  • மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
  • பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.

    தகவல் அளித்தவர்: மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Saturday, March 15, 2008

ப்ரஹன் நாட்டியாஞ்சலிBRAHAN NATYANJALI



மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.


2008 ஆம் ஆண்டில் மார்ச் 5 முதல் 10வரை தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூரில் இயங்கும் தென்னக பண்பாட்டு மையம், மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோரின் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்றது. சிவபெருமானுக்கு நாட்டிய வடிவில் அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு சுமார் 400 கலைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். டெல்லி, கல்கத்தா, பெங்களூர், கொச்சி மற்றும் பூனா இங்கிருந்தெல்லாம் தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியக்கலைஞர்கள் செலுத்தியஅஞ்சலியைக்காண மக்கள் பெருமளவில் திரண்டனர்.


வரலாற்றுச்சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோவிலில் இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பெரிய கோவிலைக்கட்டிய இராஜ இராஜ சோழன் காலத்தில் நாட்டிய வடிவில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவபெருமானை நடராஜர் வடிவத்தில் வணங்குவது தமிழர் மரபு.
வளர்ந்த கலைஞர்களும் வளரும் கலைஞர்களும் தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.


இந்த நிகழ்ச்சியில் மரபுசார்ந்த நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இதைப்போன்றே திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலி டிரஸ்ட் தலைவர் திரு.வி.கோபாலன், ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்
.
இதைப்போன்றே கும்பகோணம், சிதம்பரம் ஆகிய சிவபெருமானின் திருத்தலங்களிலும் இதே நாட்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வளரும் கலைஞர்களும், வளர்ந்த கலைஞர்களும் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தியது பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

இது தொடர்பான விவரங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள:

Brahan Natyanjali Foundation, Dr.V.V.R. Complex, Arulananda Nagar, Thanjavur - 613 007,
Phone:98424-55765, 04362-238235, Email:bnfoundation@rediffmail.com

Natyanjali Trust, Chidambaram. Phone no. 04144-222732

natyanjalikmu@yahoo.co.in or write to the Trustees. Natyanjali Trust Kumbakonam, Moopanar Bangalow, Dr. Besant Road, Kumbakonam - 612 001

தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Tuesday, March 11, 2008

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!VADUVUOOR BIRD SANCTUARY



வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது யார்?.........உள்ளூர்மக்கள்தான். முதலில் வெடிவெடிக்காமல் இருக்க பழகிக்கணும்.
அப்புறம் பறவைக்கறி கேட்கும் நாக்கையும் கொஞ்சம் அடக்கி வைக்கணும்........வைக்கிறார்கள்.
எல்லாம் காரியமாகத்தான்.
ஏரித்தண்ணீர் பாயும் பச்சை நெல்வயல்களுக்கெல்லாம் இலவச உரம் சப்ளை செய்வது விருந்தாளிப்பறவைகள் தான்.



ஊருக்குள் பத்து, இருபது வெளிநாட்டுக்காரர்கள் பைனாகுலரோடு வந்தால் நாலு குலை இளநியும் இரண்டு கூடை வெள்ளரிக்காயும் விற்கலாம். பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பீஸ் கட்டலாம். உள்ளூர்காரன் வந்தால் கதையே வேறு. மூட்டையைப்பிரித்து புளிசாதம் சாப்பிடுவான். தண்ணீர்பாக்கெட்டை சப்பிக்குடித்துவிட்டு பிளாஸ்டிக் உறையை கருவேல மரத்தைப்பார்த்து விட்டெறிந்துவிட்டுப்போவான்.


பறவைகளின் பெயரெல்லாம் வேண்டுமா? குறித்துக்கொள்ளுங்கள்.....Ibis, Painted Stork, Grey Pelican, Pintail, Comorant,Teals, Herons, River ternm, Black-headed munia,Grey heron, White-breasted kingfisher, Spotted Dove etc....etc...வடுவூர் ஏரி பெரியது. மேட்டூர் தண்ணீர்தான். கூடவே வடகிழக்கு பருவமழையும் ஒத்தாசை செய்தால் பறவைகளுக்கு கொண்டாட்டம். பறவை போடும் எச்சங்களால் மீனுக்கு கொழுக்கும்வரை கொண்டாட்டம். பறவைகளின் அலகில் சிக்கும்போதுதான் திண்டாட்டம்.


ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவையின விருந்தாளிகள் வடுவூர் ஏரியில் சுகமாக இருக்கலாம். ஒரு நவம்பர் மாதம் எடுத்த கணெக்கெடுப்பில் 20,000 பறவை விருந்தாளிகள் வந்திருந்தார்களாம்.
அப்புறம் கோடை.
ஏரியில் வெள்ளரிக்காயும் பறங்கிக்காயும் விவசாயம் நடக்கும்.
வந்தாரை வாழ வைக்கும் வடுவூர் என்றால் சரிதானே?
பறவைகளைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களுக்கு இங்கே இரவு தங்க வசதிஉண்டு. அதுவும் கொஞ்ச பேருக்குத்தான்.....
வசதியா தங்கணும்னா தஞ்சாவூருக்கு போயிடுங்க.


பறவைகளைப்பார்க்க இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன.
காசெல்லாம் கிடையாதுங்க.............எல்லாம் இலவசம்.
இது சம்பந்தமா பேசணுமா.........குறிச்சுக்குங்க....
Wildlife Warden,
Point Calimere WLS,
Collectorate,
Nagapattinam 611 002
District Nagapattinam
Tel:(04365)253092



178 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் குடியிருக்க கருவேல மரங்கள் தான் அதிகம். 1.5 கிலோமீட்டர் நடைபாதை நம்மை புகலிடத்திற்குள் கொண்டு போகும். காட்டுக்குள் போவது போன்றதொரு உணர்வு. ஏரியின் பின்புலத்தில் கோதண்டராமசாமி கோயில். வடகிழக்கு பருவமழை வரும்போது பறவையின விருந்தினர்கள் வரத்தொடங்கிவிடுவார்களாம். வட இந்தியா, மத்திய ஆசியா, திபெத், ரஷ்யா இங்கிருந்தெல்லாம் விருந்தினர்கள் வலசை வருவதாக காப்பாளர் வீராச்சாமி உங்களுக்கு சொல்லும்போது உங்களுக்கு வியப்பால் வாய் விரியும். அவர் சொல்லுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் காப்பாளர் வீராச்சாமி 1990 ல் இருந்து வடுவூர் ஏரியின் வரலாறு அறிந்தவர்.



கருவேலமரத்தின் பச்சைஇலைப்பின்னணியில் ஒருஜோடி நீர்வாத்துக்கள் மல்லாந்து இறக்கைவிரித்துப்படுத்திருப்பதை நீங்கள் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
திருப்தியாக சாப்பிட்டுவிட்டதற்கு அடையாளம் அது.
திருப்தியாக சாப்பிட்டுவிட்டு மல்லாந்து படுக்க மனிதனுக்கு நேரமிருக்கிறதா இப்போது?
கொஞ்சம் நெருங்கிப்போனால் அந்த அற்புதத்தை படம் எடுக்கலாம்.
தூரம் அதிகமாக இருப்பதால் படமெடுக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்....
மனதில் பதியவைத்துக்கொள்ளலாம்.
ஆக்கம்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Monday, March 10, 2008

முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் MUTHUPET LAGOON


சென்னைக்கு தெற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரைக்கு அருகில் முத்துப்பேட்டை உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவு. சாலை வசதியும், தொடர்வண்டி வசதியும் உண்டு.
காவிரி வடிநிலத்தின் தென்முனைதான் இவ்வூரின் இருப்பிடம். காவிரியாற்றின் 6 கிளை ஆறுகள் முத்துப்பேட்டை பகுதியில் கடலுடன் கலந்து இரண்டு மிகப்பெரிய கடற்கழிகளை உருவாக்கியுள்ளன. படகு சவாரிக்கு ஏற்ற இடங்கள் இவை.

மேற்கே அதிராம்பட்டினத்திலிருந்து கிழக்கே கோடியக்கரைவரை காடுகளின் ஆதிக்கம்தான். தெற்கே பாக்நீரிணைப்பும், வடக்கே சேறும் சகதியும் நிறைந்த நிலப்பரப்பும் விளிம்புகட்டிநிற்கின்றன.

கடலுக்குள் ஆறுகள் சேரும் முன்பாக பல லகூன்கள் உண்டாகியிருக்கின்றன. லகூன்களின் கரையில் காணப்படும் காடுகள் தான் மாங்ரோவ் காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள்...........அலையாத்தி மரங்கள் நிறைந்திருப்பதால் இந்தப்பெயர். கடல் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிலத்தைக்காப்பதால் காலம் காலமாக நிலவிவரும் தமிழ்ப்பெயர்.

முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.
13,000 ஹெக்டேரில் பரந்துவிரிந்திருந்த முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் இப்போது இருப்பது வெறும் 5,800 ஹெக்டேர் மட்டும்தான்.
காரணம்?
........இது என்ன கேள்வி?
....... மனிதன் தான்.

அலையாத்திக்காடுகள் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் காணப்படும் இயற்கையின் அற்புதம். மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் கூட.
உப்புநீரிலும் கடற்கழிகளிலும் வளரக்கூடிய வெப்பமண்டல காடுகள் இவை . இவற்றிற்கென சிறப்பான பண்புகள் உண்டு. அலையாத்தி மரங்கள் வேர்களால் சுவாசிக்கக்கூடியவை. வேகமாக வளரக்கூடியவை. இந்தக் காடுகளை வளர்த்தெடுக்க பெரும் பொருட்செலவு தேவையில்லை.
கடற்கரையை மண் அரிப்பிலிருந்தும் புயற்காற்றிலிருந்தும் அலையாத்திக்காடுகள் பாதுகாக்கின்றன என்பது பயனுள்ள செய்தி.

பல்வேறு காரணங்களால் முத்துப்பேட்டை அலையாத்திகாடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்தக்காரணங்கள் அனைத்தும் மனிதர்களால் ஏற்பட்டது என்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம்.
புதுப்புது இறால் பண்ணைகள், உப்பளங்கள் இவையெல்லாம் அலையாத்திக்காடுகளைச்சுற்றி முளைத்துவருகின்றன.
1986ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களோடு 1996ல் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஒப்பிட்டுப்பாருங்கள். மனிதர்கள் அலையாத்திக்காடுகளின் பரப்பளவைக்குறைக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
அலையாத்திக் காடுகளின் நீர்ப்பரப்பில் நீரின் இயல்பியல் வேதியியல் பண்புகள் மாற்றமடைந்துள்ளன என்பது ஆய்வுகளின் முடிவு. நச்சுத்தன்மையுள்ள கழிவுகள் கடல்நீரில் கலப்பதன் விளைவு இது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனால் மீன்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உணவுச்சங்கிலியின் ஒரு அற்புதமான கண்ணி இந்த அலையாத்திக்காடுகள். தாவரங்களின் மிச்சசொச்சங்கள் எல்லாம் மீன்கள், நண்டுகள், சிப்பிகள் இவற்றிற்கு உணவாகின்றன.
அலையாத்திக்காடுகளின் மதிப்பை நாமெல்லாம் மிகவும் காதலிக்கும் அமெரிக்க டாலரில் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஹெக்டேருக்கு ஓராண்டிற்கு 11,819 டாலர்கள்!
நெல்விளைச்சலின் மதிப்பைப்போல 10 மடங்கு!
ஆனால் விறகுக்காகவும் கால்நடைகளின் தீவனத்திற்காகவும் இந்தக் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியானது.
காலந்தாழ்த்தியாவது விழித்துக்கொண்ட வனத்துறை அலையாத்திக்காடுகளை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

1986க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் முத்துப்பேட்டையில் மட்டும் சுமார் 20ஹெக்டேர்
அலையாத்திக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவான சேதாரம்தான்,.
வனத்துறையின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெகுமதி என்றும் கொள்ளலாம்.
அலையாத்திக்காடுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு குரல்கொடுக்கும் அனைவருக்கும் நாம் தோள்கொடுப்போம்!
நண்பர்களே! அலையாத்தி காடுகளைப்பற்றிய கூடுதல் விவரங்களை அறியத்தாருங்கள்.
ஆக்கம்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Tuesday, March 4, 2008

தஞ்சாவூர்


வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்