Tuesday, March 11, 2008

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!VADUVUOOR BIRD SANCTUARY



வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது யார்?.........உள்ளூர்மக்கள்தான். முதலில் வெடிவெடிக்காமல் இருக்க பழகிக்கணும்.
அப்புறம் பறவைக்கறி கேட்கும் நாக்கையும் கொஞ்சம் அடக்கி வைக்கணும்........வைக்கிறார்கள்.
எல்லாம் காரியமாகத்தான்.
ஏரித்தண்ணீர் பாயும் பச்சை நெல்வயல்களுக்கெல்லாம் இலவச உரம் சப்ளை செய்வது விருந்தாளிப்பறவைகள் தான்.



ஊருக்குள் பத்து, இருபது வெளிநாட்டுக்காரர்கள் பைனாகுலரோடு வந்தால் நாலு குலை இளநியும் இரண்டு கூடை வெள்ளரிக்காயும் விற்கலாம். பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பீஸ் கட்டலாம். உள்ளூர்காரன் வந்தால் கதையே வேறு. மூட்டையைப்பிரித்து புளிசாதம் சாப்பிடுவான். தண்ணீர்பாக்கெட்டை சப்பிக்குடித்துவிட்டு பிளாஸ்டிக் உறையை கருவேல மரத்தைப்பார்த்து விட்டெறிந்துவிட்டுப்போவான்.


பறவைகளின் பெயரெல்லாம் வேண்டுமா? குறித்துக்கொள்ளுங்கள்.....Ibis, Painted Stork, Grey Pelican, Pintail, Comorant,Teals, Herons, River ternm, Black-headed munia,Grey heron, White-breasted kingfisher, Spotted Dove etc....etc...வடுவூர் ஏரி பெரியது. மேட்டூர் தண்ணீர்தான். கூடவே வடகிழக்கு பருவமழையும் ஒத்தாசை செய்தால் பறவைகளுக்கு கொண்டாட்டம். பறவை போடும் எச்சங்களால் மீனுக்கு கொழுக்கும்வரை கொண்டாட்டம். பறவைகளின் அலகில் சிக்கும்போதுதான் திண்டாட்டம்.


ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவையின விருந்தாளிகள் வடுவூர் ஏரியில் சுகமாக இருக்கலாம். ஒரு நவம்பர் மாதம் எடுத்த கணெக்கெடுப்பில் 20,000 பறவை விருந்தாளிகள் வந்திருந்தார்களாம்.
அப்புறம் கோடை.
ஏரியில் வெள்ளரிக்காயும் பறங்கிக்காயும் விவசாயம் நடக்கும்.
வந்தாரை வாழ வைக்கும் வடுவூர் என்றால் சரிதானே?
பறவைகளைப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களுக்கு இங்கே இரவு தங்க வசதிஉண்டு. அதுவும் கொஞ்ச பேருக்குத்தான்.....
வசதியா தங்கணும்னா தஞ்சாவூருக்கு போயிடுங்க.


பறவைகளைப்பார்க்க இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன.
காசெல்லாம் கிடையாதுங்க.............எல்லாம் இலவசம்.
இது சம்பந்தமா பேசணுமா.........குறிச்சுக்குங்க....
Wildlife Warden,
Point Calimere WLS,
Collectorate,
Nagapattinam 611 002
District Nagapattinam
Tel:(04365)253092



178 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் குடியிருக்க கருவேல மரங்கள் தான் அதிகம். 1.5 கிலோமீட்டர் நடைபாதை நம்மை புகலிடத்திற்குள் கொண்டு போகும். காட்டுக்குள் போவது போன்றதொரு உணர்வு. ஏரியின் பின்புலத்தில் கோதண்டராமசாமி கோயில். வடகிழக்கு பருவமழை வரும்போது பறவையின விருந்தினர்கள் வரத்தொடங்கிவிடுவார்களாம். வட இந்தியா, மத்திய ஆசியா, திபெத், ரஷ்யா இங்கிருந்தெல்லாம் விருந்தினர்கள் வலசை வருவதாக காப்பாளர் வீராச்சாமி உங்களுக்கு சொல்லும்போது உங்களுக்கு வியப்பால் வாய் விரியும். அவர் சொல்லுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் காப்பாளர் வீராச்சாமி 1990 ல் இருந்து வடுவூர் ஏரியின் வரலாறு அறிந்தவர்.



கருவேலமரத்தின் பச்சைஇலைப்பின்னணியில் ஒருஜோடி நீர்வாத்துக்கள் மல்லாந்து இறக்கைவிரித்துப்படுத்திருப்பதை நீங்கள் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
திருப்தியாக சாப்பிட்டுவிட்டதற்கு அடையாளம் அது.
திருப்தியாக சாப்பிட்டுவிட்டு மல்லாந்து படுக்க மனிதனுக்கு நேரமிருக்கிறதா இப்போது?
கொஞ்சம் நெருங்கிப்போனால் அந்த அற்புதத்தை படம் எடுக்கலாம்.
தூரம் அதிகமாக இருப்பதால் படமெடுக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்....
மனதில் பதியவைத்துக்கொள்ளலாம்.
ஆக்கம்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

1 comment:

cheena (சீனா) said...

வடுவூர் ஏரி செல்லும் ஆசையைத் தூண்டி விட்டது பதிவு. பாராட்டுகள்