Saturday, March 22, 2008

திருவையாற்றில் நாட்டுப்புற இசை விழா THIRUVAIYARU FOLK FESTIVAL

கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஆட்சி செய்துவந்த கிராமீயக்கலைகள், தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களின் வரவால் ஆதரவை இழந்துவருகின்றன.

கிராமீயக்கலைகளை பாதுகாப்பதும் அதை ஒரு ஜீவனமாக ஏற்று வாழும் கலைஞர்களை ஆதரிப்பதும்கூட தமிழ்மொழி வளர்ச்சியின் ஒரு அங்கமல்லவா?........
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் செயல்பட்டுவரும் தமிழக நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம், கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டுப்புற இசைக்கலைத் திருவிழாவை நடத்திவருவது தமிழர்களுக்கு பெருமை தரும் செய்தி பத்தாம் ஆண்டு நிகழ்ச்சிகள் திருவையாறு அரசர் கல்லூரித்திடலில் 14,15.03.2008 ஆகிய இருநாட்களிலும் நடைபெற்றன. மாமன்றத்தின் அமைப்புச்செயலாளர் திரு.தெ.தமிழ்ச்செல்வன் நாம் கேட்ட விவரங்களைக்கொடுத்தும் அரிய புகைப்படங்களை தந்தும் உதவினார்.
மாமன்றத்தின் தலைவர் திரு.ஆண்டவர் கோவி.கணேசமூர்த்தி வாழ்த்துக்கூறி திருவையாறு நாட்டுப்புற இசை விழாவை ஆவணப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக நாட்டுப்புறவியல் சிறப்பு ஆய்வுக்கருத்தரங்கம், தமிழக நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி என்று இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா ஏராளமான பொதுமக்களையும் அறிஞர் பெருமக்களையும் கவர்ந்திழுத்தது.
இந்த அரிய முயற்சிக்கு தென்னக பண்பாட்டு மையம், கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், அரசர் கல்லூரி, அரசு இசைக்கல்லூரி ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்து நின்றன.
தஞ்சாவூரின் மண்வாசனை மணக்க எருதுபூட்டிய கலப்பையுடன் நெற் கதிர்களைச்சுமந்து பெண்களும் கரும்புக்கட்டுடன் விவசாய பெருங்குடி மக்களும், நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து பேரணியில் பங்கேற்றனர்.
நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு போதுமான ஆதரவின்மையால் கலைஞர்களுடன் கலைகளும் அழிந்து வருவது மிகவும் வருத்ததிற்குரியது. தற்போதுள்ள நாட்டுப்புற கலைகளும் அவற்றைப்போற்றி வாழும் கலைஞர்களும் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள இந்த பேரணி உதவியது......
கொம்பு வாத்தியம் திருப்பழனம் மா.சமுத்திரம்-
பொய்க்கால் குதிரை,
கரகம்,மயில்,மாடு எ.செல்வராஜ்-
பேண்டு இசைக்குழு
மற்றும் செட்டியார்
பொம்மைகள் அலெக்ஸ் குழுவினர்-
நையாண்டிமேளம்,
கரகம்,மயில்,மாடு சர்க்கரை குழுவினர்-
நையாண்டிமேளம்,
கரகம்,மயில்,மாடு மாணிக்கம் குழுவினர்-
புலியாட்டம் சேட்டுக்குழுவினர்-
தப்பாட்டம் திருமானூர் குமார் குழுவினர்-
காளியாட்டம் துறையூர் முத்துக்குமார் குழுவினர்-
சிலம்பு, சுருள், மடுவு திருவையாறு தர்மராஜ் குழுவினர்-
அடியா இடியா தப்பாட்டம் மேல உத்தமநல்லூர் குழுவினர்-
கரகம், கோலாட்டம்,
கும்மியாட்டம் புனல்வாசல் ஆ.தி.ந.பள்ளி மாணவ மாணவிகள்-
சிலம்பாட்டம், மடுவு,
ரெட்டைக்குச்சி, குஸ்தி,
பிரிவரிசை, தீப்பந்தம் கடுவெளி நாகநாதன், கலைப்புலி கோவிந்தன்,
முகம்மது பந்தர் தாவூத் பாட்சா, தஞ்சை அப்துல்
கலிம், வலங்கைமான் ஆரோக்கியசாமி, தனபால்-


நாட்டுப்புற கலைகளைப் போற்றி வாழும் சில கலைஞர்களின் பெயர்கள்தான் இவை. இன்னும் ஏராளமானோர் நாட்டுப்புறக்கலைகள் அழிந்துவிடாமல் அவற்றை வாழ்க்கையாகவே கொண்டிருக்கின்றர். அவர்கள் சொல்லுவதையும் கேட்போமே!
சமகால பாவைக்கூத்துக்கலைஞர் கும்பகோணம் சங்கரநாதன் கூறுகிறார்.......
அசலான கலைஞன் இருந்தும் கூத்து தன்னுடைய பழைய களையை இழக்க காரணம் என்ன?
அவருடைய பதிலை படியுங்கள்......

"கலையை எப்போதும் கலைஞன் மட்டுமே முடிவு செய்வதில்லை. ரசிகனும் சேர்ந்தே முடிவு செய்கிறான். இன்றைக்கும் என்னால் விடிய விடிய கச்சேரி செய்யமுடியும். ஆனால் பார்க்க யார் இருக்கிறார்கள்? காலம் மாறிப்போய்விட்டது. அதற்கேற்ப நாங்களும் மாறித்தானே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் நாங்களும் அழியவேண்டும். இந்தக்கலையும் அழியவேண்டும். பாவைக்கூத்து என்பது பின்பாட்டும் உரையாடலும் மாறி மாறி மணிக்கணக்காக செய்யும் வேலை. எனக்கு 5,000 பாடல்கள் வரை மனப்பாடம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை. நிலைமை ஒவ்வொருநாளும் மோசமாகிக்கொண்டே போட்க்கொண்டிருக்கிறது. எனக்குத்தெரிந்த வித்தையில் பாதியே என் மகனுக்குத்தெரியும். இந்த மண்ணின் கலைகள் எல்லாம் வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இரவெல்லாம் கூத்து நடத்திய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் இரண்டுமணிநேரத்துக்குள் முடித்துவிடு என்கிறார்கள். பக்த பிரகலாதன் கதையில் ரஜனி, கமல் எல்லாம் கலந்து காமெடி செய்யச்சொல்லுகிறார்கள். நாங்களும் செய்கிறோம். ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை செய்வதுதானே கலை தர்மம்?"

எதையோ நினைத்துக்கொண்டவராக உயிரையே நிலைகுலையவைக்கும் குரலில் சங்கரநாதன் பாடத்தொடங்கினார்.

"காட்டுக்குப்போன என் கண்மணி
அந்தி நேரமாகியும் வீட்டுக்கு
வாரதைக்காணேன்
வேகுதன் உள்ளம் அய்யோ
மகனே......மகனே....!"


இரவு முடிந்தது. பொழுது விடிந்தது. பொம்மைகள் மனிதர்களாகவும், மனிதர்கள் பொம்மைகளாகவும் மாறிவிட்டிருந்தார்கள்.
கரகமாடும் மலைச்சாமி சொல்லுவதையும் கேளுங்கள்........

எம்.இ. பட்டதாரியான இவர் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் இவற்றில் மேடைநிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த இவரின் குரு கரகாட்டக்காரன் புகழ் லூர்துசாமி அய்யா மற்றும் கலைமாமணி வேலு அய்யா ஆகியோர். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளர்.
தற்போது தஞ்சாவூரில் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன் அவர்களின் ஆதரவுடன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
"நையாண்டி மேளத்துடன் கரகம் ஆடவேண்டும் என்பதே முறை. ஆனால் கால மாற்றமும் மீடியாக்களின் ஆதிக்கமும் நாட்டுப்புற கலைகளை சத்தமில்லாமல் அழித்துவருவது வேதனை அளிக்கிறது.நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையும், தரமும், பொருளாதாரமும் மேம்படவேண்டும். அரசும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், " என்கிறார் திரு. மலைச்சாமி.
பத்தாண்டுகளாக செயல்பட்டுவரும் திருவையாறு நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம் பல இடையூறுகளையும் தாண்டி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாட்டுப்புறக்கலையை ஆதரிப்பதோடு தங்களுடைய கடமை தீர்ந்துவிட்டது என்று எண்ணாமல் இக்கலையை வெளிஉலகத்திற்கு வெளிச்சம்போட்டுக்காட்டும் இதுபோன்ற மன்றங்களை சொல்லாலும் செயலாலும் ஆதரிக்கவேண்டும்.
தொடர்பு கொள்ள விழைவோர்:
தலைவர், தமிழக நாட்டுப்புற இசைக்கலை மாமன்றம், திருவையாறு- 613204, தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி எண்கள்:04362-260279, 260229,9443561776
தகவல்: மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

2 comments:

cheena (சீனா) said...

நல்ல முயற்சி - அரிய கலை. தஞ்சையில் பச்சைக் காளி, பவளக் காளி பார்த்தது ( 1960-63) பசுமையாக நினைவிற்கு வருகிறது. மற்ற கலைகள் எல்லாம் ரசித்த காலம் அசை போட வைக்கிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.