Tuesday, March 4, 2008

தஞ்சாவூர்


வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்

5 comments:

மஸ்தூக்கா said...

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியின் பெருமைகளை அழகு தமிழ்க் கவிதையாக அருமையாக வடித்துள்ளீர். வாழ்த்துகிறேன் புகாரி.
தஞ்சாவூர் மைந்தனுக்கு தமிழைச் சொல்லியா கொடுக்கவேண்டும்?

Unknown said...

அன்பின் மஸ்தூக்கா,

உங்கள் ஊர் பற்றியும் அதன் பண்பாடு கலாச்சார சிறப்புகள் பற்றியும் விரிவாக எழுதி அனுப்புங்கள். அடுத்த பதிவாக தஞ்சாவூர் வலைப்பூவில் இடலாம்.

அன்புடன் புகாரி

சேதுக்கரசி said...

தஞ்சாவூர் கூட்டுப் பதிவுக்கு வாழ்த்துக்கள். இதையும் திரட்டிகளில் காண ஆவல்.

cheena (சீனா) said...

புகாரி, நல்ல முயற்சி - அருமையான பதிவின் தொடக்கம். வாழ்த்துகள்.

Unknown said...

தமிழ் மணக்கும் தஞ்சை மண்ணின் பெருமையை விளக்கம் வண்ணம் துவங்கியிருக்கும் இவ்வலைப்பூவை துவக்கிய ஆசிரியர் குருமூர்த்தி ஐயாவிற்கும் அவரின் மாணவரான "அன்புடன்"-தமிழ் இணையக் குழும ஆசிரியர் தஞ்சை மண்ணின் மற்றுமொரு கவிஞர் புகாரி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்