Sunday, April 20, 2008

தாட்டு இலையில் தஞ்சாவூர் விருந்து...THANJAVUR FOOD SERVICE

தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே சுழித்தோடும் காவிரி, பச்சைப்பசேலென்ற பயிர்கள், தலையசைக்கும் நெல்வயல்கள், வானுயர்ந்த கோபுரங்கள், ரசனையான மனிதர்கள், சங்கீதம், பரதநாட்டியம், நாட்டுப்புறகலைகள், கும்பகோணம் டிகிரி காப்பி, தாட்டு இலை சாப்பாடு, வெற்றிலை சீவல்........இப்படி நினைவெல்லாம் விரிந்துகொண்டே போகும்....
அது என்னங்க...? தாட்டு இலை சாப்பாடு...! தஞ்சாவூர்க்காரர்களின் சாப்பாட்டு ரசனை சாப்பிடும் இலையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. நல்ல அகலமான நுனி இலையைத்தான் தாட்டு இலை எனக்குறிப்பிடுகிறார்கள். எப்போது எந்தெந்த வகையில் உணவு இருக்கவேண்டும், அதை எப்படி பக்குவமாக தயாரிக்கவேண்டும், எப்படி ரசனையோடு பரிமாறவேண்டும், எப்படி சாப்பிடவேண்டும் என்பதெல்லாம் தஞ்சாவூர்க்காரர்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன பெருமைமிக்க சம்பிரதாயங்கள். வீட்டு நிகழ்ச்சிகளில் சமையல், சாதாரண நாட்களில் சமையல் ஆகிய இரண்டிலுமே இத்துணை அம்சங்களையும் காணமுடியும்.

ஒரு சிறப்பு விருந்தில் எந்தெந்த உணவு வகைகள் இடம் பெறும்? எப்படி பரிமாற வேண்டும்?

பாயசம், தயிர்ப்பச்சடி, மாங்காய் அல்லது நார்த்தங்காய் இனிப்புப் பச்சடி, இரண்டு கோசுமறி, ஒரு காரக்கறி, ஒரு தேங்காய்போட்ட கறி, பருப்பு உசிலி, பூசணிக்காய் அல்லது கத்தரிக்காய் ரசவாங்கி, அவியல், வறுவல், பருப்பு, வடை, அப்பளம், ஸ்வீட், முக்கனி (வாழை, மா, பலா), இவையல்லாது இரண்டு வகையான கலந்த சாதம்.

இலையில் இடம்பெற வேண்டிய முறை:
இலையின் நுனிப்பகுதி சாப்பிடுபவரின் இடப்பக்கம் இருக்கும்படி இலைபோடப்படவேண்டும். பாயசம் வலப்பக்க ஓரமாக இலையின் கீழ்ப்பகுதியில் ஒரு ஸ்பூன் அளவு வைக்கப்படவேண்டும். மேலே கூறிய உணவு வகைகள் வரிசைப்படி இலையின் மேல்பகுதி வலப்பக்க ஓரத்திலிருந்து வரிசையாக வைக்கப்படவேண்டும். தயிர்ப்பச்சடி முதல் காய்கறிகளை வைத்திக்கொண்டே வந்தால் வடை வறுவல் முதலியவை நுனி இலைப்பகுதிக்கு வந்துவிடும். பருப்பு மட்டும் இலையில் எதிர்ப்பக்கத்தில் நடு நரம்பிற்குமேல் வலப்புறத்திலுருந்து சற்றே தள்ளி இடம் பெறும். இதற்குப்பிறகு இலையின் கீழ்ப்பகுதியில் நடுவில் சாதம் வைக்கப்பட்டு, நெய் ஊற்றப்பட்ட பிறகு பாயசத்தை முதலில் சாப்பிட சற்றே நேரம் கொடுத்து, சாம்பார் அல்லது பிட்ளை முடிந்ததும், மோர்க்குழம்பு, ரசத்திற்கு சாதம் கேட்டு ரசம், மீண்டும் அப்பளம்-பிசைந்த சாதங்களும், பாயசமும் ஒன்றன்பின் ஒன்றாக பரிமாறப்படவேண்டும். ஊறுகாய், சாதம், மோர் தேவைப்படுபவர்களுக்கு சாம்பார் (தொட்டுக்கொள்ள).

எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தில் 'சந்தேகத்திற்கு சாதம்' என்று கூறியவாறே சாதமும் மோரும் வலம் வரும். யாருக்காவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றினால் சாப்பிட்டுக்கொள்ளலாம். இது கட்டாயமான தஞ்சாவூர் சம்பிரதாயம். இதைப்போல ரசத்திற்கு முன்னால் 'சந்தேகத்திற்கு சாம்பார்' வலம் வரும்.

திருமணத்தன்று மதியம் சாப்பாட்டு மெனுவும் இதுதான். பழைய சம்பிரதாயத்தில் கலந்த சாதங்கள், வடை கிடையாது. பாயசமும் பருப்புவெல்ல பாயசம்தான். ஸ்ரீவைஷ்ணவ வீடுகளில் புளியோதரை, அக்கார அடிசில், தயிர்வடை கட்டாயம் இடம் பெறும். ஸ்வீட், அவரவர்கள் வசதிக்கேற்ப உதிர்த்த பூந்தி, குஞ்சாலாடு, மைசூர்பாகு, பாதுஷா, ஜாங்கிரி- இவற்றில் ஒன்று போடப்படும். ஸ்வீட்களின் ராஜா தஞ்சாவூரைப்பொறுத்தவரை பதிர்பேணிதான். இதில் பதிர்பேணி, சேமியாபேணி என்று இரண்டுவகை உண்டு. பதிர்பேணி என்பது பெரிய வடிவிலான பூரி. சேமியா பேணி வடிவில் பெரிய இடியாப்பம். மைதாமாவினால் செய்யப்படும் இதன்மீதுபூரா சர்க்கரையையும் (அரைத்த ஜீனி) அதன்மீது பாலையும் ஊற்றி ஊற வைத்து சாப்பிடவேண்டும்.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Monday, April 14, 2008

தஞ்சை வட்டார வழக்கு THE DIALECT OF THANJAVUR

'திண்ணை வீரா' என்றொரு சிறுகதை.
தி.ஜானகிராமன் எழுதியது.
தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்தபடி ஊர்வழக்குகளைத்தீர்த்து வைக்கிறார் ஒரு பெரிய மனிதர்.
அந்த பெரிய மனிதருக்கும் கடனைத்திருப்பிக்கொடுக்காதவனுக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். தஞ்சை வட்டார வழக்கு உங்களுக்கு பிடித்துப்போகும்.

"எல என்ன கட்டை ரொம்பத் துளுத்துப்போச்சு? ம்ஹும், சீ......கையைக் கீளப்போடு.......ஏண்டல, கணக்குத்தீக்க அம்மாசிக்கே வரேன்னு சொன்னியால்லியாடா?.......ஏண்டா! சொன்னியால்லியாடா? சொன்னியால்லியாடா? ஏண்டா சும்மா நிக்கிறியே? ஏல, உன்னத்தாண்டா.......ஏன், பேசமாட்டியா? இப்ப....எழுந்து வந்தேனோ.....?"

"அம்மாசிக்குத்தான் என் மாமியா இளுத்துக்கிட்டு கிடந்துச்சுங்க. காலங்காட்டியும் கிளம்பிவரணும்னுதான் படுத்தேன். ரண்டு சாமத்துக்கு ஆள் வந்துருச்சு......முன்னெத்தி மயிரைப்புடிச்சாத்தெரியாதுங்க.....அப்படி இருட்டு கும்பிக்கிட்டு இருந்தது. அதிலேயே உளுந்தடிச்சிகிட்டுப் போனோம். விடிஞ்சு போய் சேர்ரதுக்குள்ளாக திருவாலூர் ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப்போயிட்டாங்களாம். அப்புறம் மேலே போயி.......அவதியாப்பூட்டுங்க....."

"சரி, அப்புறம்? மருமவன் கைராசிதான் மாமியா பொளச்சுகிட்டா. சரி. உடனே வர்றதுக்கென்னவாம்? அம்மாசி போயி பதினோரு நாளாச்சிடா?"

"போன இடத்திலே டாகுட்டருக்கும் மருந்துக்கும் நாப்பது ரூவாக்கு மேலே போயிடுச்சுங்க. அப்புறம் மேலே......."

"சரி. எடு பணத்தை!"

"அதாங்க சொல்ல வந்தேன்.....இந்த மருந்து செலவு ரொம்ப அடாபுடியாப் பூட்டுங்க.....!"

"அதுக்காக......?"

"இந்த மார்களி முச்சூம் பொறுத்துக்கிட்டா, பொங்கல் களிஞ்சு மூணா நா கொண்டாரெனா இல்லியா பார்த்துக்கங்க..."

"ஏல, இஞ்ச வா இப்படி வாடாங்கறேன். வாடா இப்படி வரமாட்டியா? இப்ப எழுந்துவந்தேனோ, தெரியுமா?"

பந்தல் காலடியில் நின்ற ஆசாமி திண்ணைப்பக்கம் போனான்.

"இஞ்ச வாடா இப்படி......இப்படி கிட்ட வாடா, வரமாட்டே! இப்ப எழுந்து வந்தன்னா பாத்துக்க...."

ஆசாமி அருகில் போனான்.

"போட்டுக்கடா......என்னடா பாக்கிறியே? கன்னத்திலே போட்டுக்கடாங்கிறேன்......பளார் பளார்னு நாலு போட்டுக்கணும். மாட்டியா? நான் தான் போடணுமா?"

ஆசாமி பளார் பளார் என்று கன்னத்தில் நாலு போட்டுக்கொண்டான்.

"போட்டுக்கிட்டியா?.....இதைக்கையில எடு......எடுத்துக்கிட்டியா? என்னிக்குப் பணம் கொண்டாரே?"

"தை மாசம் நாலாம் தேதி."

"நிச்சயமா?"

"நிச்சயமா."

"கிழக்கே பாத்துக்கிட்டு சொல்லுறே பாத்துக்க. கையிலே எடுத்துக்கிட்டு நிக்கிறியே .....அது என்ன தெரியுமாடா?

"பொய்த்தவம்."

"பொய்த்தவமில்லேடா, பொஸ்தகம்......சும்மா தங்கமத்தில்லால இல்லே. திருமுருகாற்றுப்படை. சுப்பிரமணியசாமி இருக்குறார் பாரு. அவர் மேலே பாடின பாட்டுங்க. அத கையிலே வச்சுக்கிட்டு கிழக்கைப்பாத்துக்கிட்டு, தைமாசம் நாலம் தேதி கொண்டாரேன்னு சொல்லியிருக்கே. ஜாக்ருதெ. பயலே, தேதி தப்பிச்சோ, கண்ணைப்பிடுங்கிப்புடுவாரு சுப்ரமணியரு! உஜாரா இரு.....தெரிஞ்சுதா? ஏய், செவுத்தியான்! கேட்டுக்கிட்டியா, தைமாசம் நாலாம் தேதின்னு சொல்றான்....சவநாது. நீயும் கேட்டுக்க!"

"கேட்டுதுங்க" என்று பந்தல் ஓரத்திலிருந்து இரண்டு ஆட்கள் சாட்சி சொன்னார்கள்.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Wednesday, April 9, 2008

செம்பியன் கண்டியூரில் ஒரு கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு STONE AXE WITH INDUS VALLEY SCRIPT FOUND NEAR MAYILADUTHURAI

இந்துசமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வி.ஷண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது இரண்டு கற்களாலான ஆயுதங்களைக்கண்டெடுத்தார். இந்த ஆயுதங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தஞ்சாவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதத்தின்மீது உள்ள நான்கு குறியீடுகள் உள்ளன. இக்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக்காலத்தைச்சேர்ந்த தாழிகள், கருப்பு சிவப்பு மட்கலங்கள், குறியீடு பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் மற்றும் எலும்புத்துண்டுகள், சாம்பல் நிற மட்கலங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள வாணாதிராஜபுரம், வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள முருகமங்கலம் ஆகிய ஊர்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையதாகவும்(ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48), அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும்(எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைதியிலும்(எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறைவடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும்(எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

"இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது" என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. "நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் திரு ஐராவதம் மகாதேவன். வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

சிறப்புகள்:
புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.
புதிய கற்காலப் பண்பாட்டுத்தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையேயான தொடர்பினை வலியுறுத்தும் கண்டுபிடிப்பு.
சிந்துவெளிப்பண்பாட்டு நாகரிகக் கூறுகள் கோதாவரி ஆற்றுக்கும் தெற்கே பரவி இருந்ததற்கான உறுதியான சான்று.
தமிழகத்தில் சிந்துவெளிப்பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று
ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக்கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று
வடக்கு தக்காணத்தில் நிலை பெற்றிருந்த் ஹரப்பா பண்பாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புக்கான சான்று.
தமிழரின் எழுத்துத்தொன்மையினை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்று.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும்.தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.
மேலும் படிக்க விரும்புவோருக்கு
http://www.tn.gov.in/misc/Archaeological_discovery.htm
http://kalyan96.googlepages.com/Sembiyankandiyurcelttool.pdf

தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Monday, April 7, 2008

தஞ்சை ராமையாதாஸ் THANJAI RAMAIYADOSS

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி தான் சொந்த ஊர். அங்குள்ள செயிண்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அத்துடன் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
கவிஞரின் மகன் ரவீந்திரன் அப்பாவைப்பற்றி கூறுகிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தருவார்.
மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தருவார்.
புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க” என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய “ஆனந்தக்கோனாரே” பாடலும் சர்ச்சைக்குள்ளானது.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்”
தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.
இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், “நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா’ என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே” என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.
திருக்குறள்
சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.
1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் “திருக்குறள் இசையமுதம்” எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-
“நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்” என்று அப்பா சொன்னார்.
திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.
45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், “இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-
சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.
கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். “சிங்காரி”யில் “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.
“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.
ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.
அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.
இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.
இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”
கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.
கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.
இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:
“ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல
ஆண்டவனே இல்லையே”
- இதுதான் பாட்டு.
இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி - பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.
அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”
சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. “ஆளைக் கண்டு மயங்காதே” படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.”
இவ்வாறு விஜயராணி கூறினார்.
கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.
விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.
நன்றி:Tamil News
தொகுப்பு:மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Sunday, April 6, 2008

கும்பகோணம் வெற்றிலை KUMBAKONAM BETAL LEAF

தஞ்சாவூர்க்காரர்கள் வெற்றிலைப்பிரியர்கள். சரியாகச்சொல்வதானால் வெற்றிலை வெறியர்கள். அவர்கள் வெற்றிலை போடும் அழகே தனி. வெற்றிலையை வலிக்காமல் எடுப்பதும், அதற்கு வலிக்காமல் முதுகைத் தடவிக்கொடுப்பதும், சுண்ணாம்பை நடுவிரல் நுனியால் ஓவியம் வரைவதுபோல் தீட்டுவதும், மெதுவாக மடக்குவதும், பாக்கை வாசனை பார்ப்பதுவும்,......போதும்.........இதெல்லாம் எதற்காக தெரியுமா?........அடுத்து செய்யப்போகும் காரியத்தை அலசி ஆராய்வதற்காகத்தான்....

வெற்றிலைக்கும் நமக்கும் தொடர்பு அதிகம். கல்யாணம் தொடங்கி காட்டுக்குப் போகும்வரை வெற்றிலை நம்முடன் கூடவே வரும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. இத்தனை ஊர்கள் இருக்கும்போது வெற்றிலைக்கு கும்பகோணத்தின் மேல் மட்டும் காதல்!
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். கும்பகோணத்திற்கு வந்த முதல் காம்பு எந்த ஊரிலிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராவது நிச்சயம்.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் கற்பனை ஊற்று சுரக்க வெற்றிலையும் ஒரு காரணமாம். விஞ்ஞானத்துக்கும் எட்டாத காரணம் என்று வியப்பாக இருக்கிறதல்லவா!

வெற்றிலைபோடும் ரசனையை வெற்றிலையின் ரசிகர்களால் தான் நன்றாக வெளிப்படுத்தமுடியும். தஞ்சாவூர் தந்த எழுத்தாளர் ஜானகிராமன் எழுதிய 'வேதாந்தியும் உப்பிலியும்' என்றொரு சிறுகதை. வெற்றிலை போடுபவருக்கும், வெற்றிலை வாங்குபவருக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். நீங்களும் வெற்றிலையின் ரசிகராகிப் போவீர்கள்!

"நேத்து ஒரு கவுளி கொடுத்தே......அதென்ன வெத்தலையா கறிவேப்பிலையா? எல்லாம் துக்கினியூண்டு, துக்கிணியூண்டு.....! சுண்ணாம்புக்கலயத்தை கழுத்தில் கட்டிக்கவேண்டியிருந்தது. போதும் போதாத்துக்கு ஒரு மருமான் வந்து சேர்ந்தான் மாயவரத்துலேர்ந்து! ஒரு மணிக்கு கால் கவுளின்னு
அரைத்துத்தீர்த்துப்பிட்டான்!"

"மாயவரத்து ஆளுங்களுக்கு காப்பி கொடிக்கால் வெத்தல போட்டுப்பழக்கம். நர...நரன்னு மாடு கடிக்கிறாப்புல கடிக்கணும். துருப்பிடிச்ச டின்னுகணக்கா......கருப்பா....மொத்தமா இருக்கும். இந்தமாதிரி குஞ்சுங்களெ எங்க கண்டிருப்பாங்க! இத வாயிலெ போட்டா புள்ளியார்பட்டி வெள்ளரிப்பிஞ்சு. இதுக்கு பல்லா வேணும்? பொக்க வாயெ ஒரு தடவெ அப்படி லேசா அசைச்சிட்டாலே அப்படியே அரைஞ்சு அமிர்தம் ஊறுமே......."

"அது சரிய்யா....குஞ்சு, குஞ்சுன்னு சுண்ணாம்புக்கலயத்தையேவா கழுத்துல கட்டிக்கவிடறது.....? நீயே பாரு. தோ....இந்த உள்ளங்கையிலே மூணு வெத்தலை வெச்சுண்டுட்டேன். இந்த வெத்தலைய பரமக்குடிக்காரன் மாதிரி நிறையிலே வாங்கினாத்தான் கட்டும். இப்படி எண்ணி எண்ணி வாங்கினா நூறு வெத்தல நாலு தடவைக்குத்தான் வரும்!"
நன்றி: தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Saturday, April 5, 2008

ஆரூர் ஆழித்தேர் THIRUVARUR TEMPLE CAR

திருவாரூர் பெரியகோயில் பிரமாண்டங்களுக்கு பெயர் போனது. சைவசமய மரபில் பெரியகோயில் என்றால் திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலையே குறிக்கும். கோயிலின் பரப்பளவு 5 வேலி. கமலாலயம் என்றழைக்கப்படும் குளம் 5 வேலி.செங்கழுநீர் ஓடை 5 வேலி. கோயிலுக்கு சொந்தமான ஆழித்தேரின் எடை 220 டன்.
பிரமாண்டங்களையும் பிரமிக்கச்செய்யும் ஆழித்தேர் உலகில் உள்ள மற்ற தேர்களிலிருந்து வித்தியாசமானது. விஸ்வரூபமானது.

தொன்மை, கலைநயம், வடிவமைப்பு, பிரமாண்டம் ஆகியவற்றால் தஞ்சாவூரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களைப் பதித்துள்ள ஆழித்தேரின் சிறப்புகள் அளப்பரியது.
வியத்தகு ஆழித்தேரைக்கொண்ட அருள்மிகு தியாகராஜசுவாமிக்கு 'ஆழித்தேர் வித்தகர்' என்ற பெயரும் உண்டு.

பெரும்பாலான தேர்களின் விமானங்கள் அறுபட்டை, எண்பட்டைகளைக் கொண்டதாக இருக்கும். அல்லது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆழித்தேர், பீடம் முதல் விமானம் வரை நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து பட்டைகளும் கொண்டிருக்கும்.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை தேர்ச்சீலைகள் அலங்கரிக்கப்படும் பகுதியின் உயரம் 48 அடி. விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி. மொத்த உயரம் 96 அடி

அலங்காரப்பொருட்கள்:
பெரிய குதிரைகள்-4, ரிஷபம்-8, யாளம்-1. பாம்புயாளம்-2, பிரம்மா-1 துவாரபாலகர்-2, கமாய் கால்-2, மேல்கிராதி-4, கீழ்கிராதி-2, பெரியகத்தி,கேடயம்-2, பூக்குடம்-16, ராஜா, ராணி-2, முதியவர்-மூதாட்டி-2, சுருட்டி-4, இலை-8, பின்பக்க கமாய் கால்-6, அம்பாரத்தோணி-2 உள்பட சுமார் 5 டன் எடையுள்ள 68 அலங்காரப்பொருட்கள் ஆழித்தேரில் பொருத்தப்பட்டு அழகுக்கு அழகூட்டப்படுகிறது.
இவற்றைத்தவிர கட்டுமானப்பொருட்களாக பயன்படும் 5 டன் பனஞ்சப்பைகள், 500 கிலோ துணிகள், 50 டன் எடையுள்ள கயிறு ஆகியவையும் அடக்கம்.
தேரை எளிதாக இயக்கவும், திருப்பவும் 1971 ஆம் ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் மூலம் இரும்புச்சக்கரங்களும், ஹைட்ராக்லிக் பிரேக்கும் பொருத்தப்பட்டன.
ஆழித்தேரின் வடம்கூட தேரின் சிறப்பைக்கூறும். தேரில் பொருத்தப்படும் வடத்தின் சுற்றளவு 21 அங்குலம். 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்களை இணைத்து பக்தர்கள் இழுக்க அசைந்தாடும் ஆழித்தேரோட்டத்தைக்காணக் கண் கோடி வேண்டும்.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆழித்தேரை சீரமைத்து மீண்டும் இயக்கியதன் மூலம் ஆழித்தேரின் வரலாற்றுப்பக்கங்களில் படிய இருந்த தூசைத் தட்டிய பெருமை திராவிட முன்னேற்றக்கழக அரசைச் சாரும்.
பக்தர்கள் மட்டுமல்லாது, அயலநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வியந்து போற்றும் ஆழித்தேரால் மாவட்டத்திற்கு மட்டுமல்ல.....தமிழ்நாட்டிற்கே பெருமை.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி. cauverynagarwest@gmail.com

Wednesday, April 2, 2008

தடம் பதிக்கவேண்டும்...தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்........THAAITHAMIZH NURSERY AND PRIMARY SCHOOLS

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.
இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால் வலிமையானவை. இவை ஆல்போல் தழைக்கும் காலம் தொலைவில் இல்லை. தமிழ் நாட்டில் அரசின் நேரடி நிர்வாகத்திலும், தனியாரின் மறைமுக நிர்வாகத்திலும் பட்டிதொட்டியெங்கும் தமிழ் வழியில் கற்பிக்கும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. போதாக்குறைக்கு ஆங்கிலவழியில் கற்பிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஒத்த எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வளர்ச்சியை ஊடகங்கள் புற்றீசல்களுக்கு ஒப்பிட்டாலும் ஊடகங்களின் சொந்தக்காரர்களே மெட்ரிக் பள்ளிகளை ஆதரிப்பது நாமெல்லாம் அறிந்த ஒன்று.

தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளுக்கு அவசியம் என்ன?

அருகாமையில் உள்ள அரசுப்பள்ளிகள் முழுஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை செய்யாதபோது ஏழை எளியமக்கள் தொலைதூர பள்ளிகளுக்கு தம்முடைய குழந்தைகளை அனுப்ப இயலாது போகிறது. குறைந்த செலவில் தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியுடன் பண்பாட்டை சொல்லித்தரக்கூடிய ஒரு மாற்று ஏற்பாடு ஏழை மக்களுக்கு தேவைப்படுகிறது. அந்தந்தப்பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் துவங்கி நடத்தும் பள்ளிகளே தாய்த்தமிழ் பள்ளிகள்.

மரங்களைப் பிடுங்கி நடுவதல்ல நம் பணி
விதைகளைப் பதிந்து வளர்ப்பதே நம் பணி

என்ற முழக்கத்துடன் தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இப்பள்ளிகளை நடத்திவருகின்றனர்.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளின் நோக்கம் மாசு மருவற்றது. அரசின் பாடநூல்கள்தான் இங்கும் கற்பிக்கப்படுகின்றன. அரசின் தேர்வுமுறையும் அரசு விதிக்கும் தேர்ச்சிவிதிகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் வழிவந்த மாணவர்கள் தற்போது ஒன்பதாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்றுவருகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மெட்ரிக்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையே ஆங்கிலமொழியில் தம்முடைய பிள்ளைகள் பேச வேண்டும் என்ற ஆவல்தான்.
ஆங்கிலம் படித்தல் வேறு........ஆங்கில வழியில் பிறபாடங்களை படித்தல் வேறு.......என்பதை உணராமற்போவதன் விளைவு இது.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது. மற்ற பாடங்கள் தமிழ்வழியில் கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் சிந்தனைத்திறன் மேம்படுகிறது. மாணவர்கள் ஆங்கில அறிவிலும், பாட அறிவிலும் ஒருசேர முதன்மைபெறுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, நாச்சியார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இயங்கிவருகின்றன. அனைத்துப்பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றிவருகின்றன.

மற்ற பள்ளிகளிலிருந்து இவை எவ்வாறு வேறுபடுகின்றன?

மாணவர்கள் அரும்பு, மொட்டு, மலர் என்று வயதுவாரியாக பிரித்தறியப்படுகின்றனர்.
கையுறை, காலுறை, கழுத்துப்பட்டை இல்லாத எளிமையான எடுப்பான சீருடை.
தலைமை ஆசிரியரையும் ஆசிரிய ஆசிரியைகளையும் அத்தை, மாமா, அக்காள், அண்ணன் என்ற உறவு முறையில் அழைக்கின்றனர்.
மாணவர்களை வாடா, போடா என்று அழைக்கும் கொடுமை இல்லை.
மாணவர்களை அடிக்கும் வன்முறை இல்லை.
"சுந்தரம் நீங்கள் சொல்லுங்கள்"............."கார்த்திகா இங்கே பாருங்கள்" என்று ஆசிரியர்கள் மாணவர்களை அழைக்கின்றனர்.
மாணவர்கள் சந்திக்கும்போது கைகூப்பி "வணக்கம் வெற்றி உறுதி" என்றும், மாணவர்கள் பிரிந்து செல்லும்போது கட்டைவிரலை உயர்த்தி "நன்றி மீண்டும் சந்திப்போம்" என்றும் இயல்பாக கூறும்போது நம்முடைய நெஞ்சு நிமிர்ந்துகொள்கிறது.
பாடத்துடன் இயல்பான முறையில் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.
திங்கள், புதன், வெள்ளி ஆகியநாட்களில் யோகாசனம் கற்பிக்கப்படுகிறது.
செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் ஆங்கில பேச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
உரிய வயதிற்குப்பிறகே எழுத்துப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு புத்தகமூட்டையை சுமக்கும் பயிற்சி இங்கு தரப்படுவதில்லை.
பெற்றோருடன் இப்பள்ளிகள் இடையறா தொடர்பு வைத்திருக்கின்றன. இப்பள்ளிகளின் உயிரோட்டமே பெற்றோர்தொடர்புதான். அரசு நடத்தும்பள்ளிகளில் பெற்றோர் தொடர்பு அவசியமில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
வெறும் 40 ரூபாயும், 50 ரூபாயும் மாதக்கட்டணமாக பெற்றுக்கொண்டு மாணவர்களை இப்பள்ளிகள் பயிற்றுவிப்பது குறிப்பிடத்தக்கது.
வாரம் ஒருமுறை நண்பகல் உணவாக இயற்கை உணவு கொண்டுவர மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களும் ஏற்று நடக்கிறார்கள்.
மறைந்துவரும் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றை ஒவ்வொரு செயலிலும் நிலைநிறுத்த தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் முயற்சித்து வருகின்றன.


தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாச்சியார்கோயில்.

1998 ஆம் ஆண்டு 22 குழந்தைகளுடனும் இரு ஆசிரியர்களுடனும் துவக்கப்பட்ட இப்பள்ளி தற்போது 75 குழந்தைகளுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது.

மொழி ஆர்வலர் ஒருவர் வாடகையின்றி கொடுத்த நிலப்பரப்பில் போதுமான கட்டிட வசதியுடன் இயங்கிவருகிறது. விளையாடுமிடம், கழிப்பிடவசதி அனைத்தும் இந்தப்பள்ளியில் போதுமானதாக உள்ளது. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது.
தமிழர் உறவின்முறை அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இப்பள்ளி இயங்குகிறது. வாகனவசதி இருப்பின் இந்தப்பள்ளி இன்னும் சிறப்பாக வளர்ச்சியடையும்.
தொடர்பு முகவரி: திரு.கோ.ச.சோலை மாரியப்பன், தாளாளர், தமிழ்த்தாய் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, தமிழர் உறவின்முறை அறக்கட்டளை, கோவனூர் சாலை, நாச்சியார் கோயில்-612682 குடந்தை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தொலைபேசி எண்கள்:0435-2466165 web: www.geocities.com/thamiz e mail:
solaithamizh@yahoo.co.in

தாய்ததமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பாப்பாநாடு.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மனிதம் கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருமதி கா.தங்கம் அவர்கள் தாளாளராகவும், தலைமை ஆசிரியையாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ்....தமிழர் பண்பாடு என்று ஓயாமல் உச்சரிக்கும் இவரது கணவர் திரு. இரா. காமராசு ஒத்துழைப்பு நல்கிவருகிறார். "மரங்களைப் பிடுங்கிநடுவதல்ல நம் பணி.......விதைகளைப்பதிந்து நடுவதே நம் பணி" என்பது இவரது முழக்கமாக உள்ளது. 85 குழந்தைகளுடனும், 10 ஆசிரியைகளுடனும் இப்பள்ளி இயங்கிவருகிறது. வாடகை நிலத்தில் போதுமான கட்டிடவசதியுடன் இப்பள்ளி இயங்கிவருகிறது. கழிப்பிட வசதி, விளையாட்டிடம் இவையெல்லாம் போதுமானவை. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது. வாகன வசதி இருப்பின் இன்னும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ளது.
தொடர்பு முகவரி: திருமதி கா.தங்கம், தாளாளர், மனிதம் கல்வி அறக்கட்டளை, மாரியம்மன் கோயில் தெரு, பாப்பாநாடு, தஞ்சாவூர் மாவட்டம்-614626 தொலைபேசி எண்கள்: 9943059216, 9943059218, 9943059219


தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பட்டுக்கோட்டை.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இப்பள்ளி, தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக திரு. இரா.கலைச்செல்வன் அவர்களும், தாளாளராக திரு.சி.திருஞானம் அவர்களும் இயங்குகின்றனர். ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்ற கல்வியாளர் திரு. புரவலன் அவர்கள் செயலர் பொறுப்பில் பணியாற்றுகிறார். வாடகை நிலத்தில் சொந்தக்கட்டிடத்துடன் இயங்கும் இந்தப்பள்ளி தற்போது 60 மாணவர்களுடனும் பத்து ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து வசதிகள்நிறைந்த புதிய இடத்தில் வாகனவசதியுடன் இப்பள்ளி செயல்பட உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்பு முகவரி: தாளாளர், தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, 359-அ, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பட்டுக்கோட்டை-614 602
தொலைபேசி எண்கள்: 9443448406, 9443662414, 9443617299, 9944926009

தமிழக அரசு என்ன செய்யவேண்டும்?

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் அரசின் கல்வி அதிகாரிகளால் அவ்வப்போது பார்வையிடப்பட்டு குறிப்புகள் எழுதப்படுகின்றன. இப்பள்ளிகளின் மாற்றுச்சான்றிதழ்கள் அரசுப்பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றை சிறப்புப்பள்ளிகளாக கருதி தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இங்கு படிக்கும் பிள்ளைகளும் தமிழரின் பிள்ளைகளே. மற்ற பள்ளிகளுக்கு அரசு வழங்கிவரும் இலவச பாடப்புத்தகங்களை தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகளுக்கும் வழங்கவேண்டும். தமிழகத்தின் எல்லாபள்ளிகளிலும் குழந்தைகள் மதிய உணவு சாப்பிடும்போது தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டும் பசியோடு இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
தமிழால் வளர்ந்தோம் நாம்!
தமிழையும் தமிழரையும் வாழவைப்பது நியாயம்தானே!

தகவல் திரட்டியவர் மற்றும் தொகுத்தவர்:
மு.குருமூர்த்தி, cauverynagarwest@gmail.com