Monday, April 7, 2008

தஞ்சை ராமையாதாஸ் THANJAI RAMAIYADOSS

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி தான் சொந்த ஊர். அங்குள்ள செயிண்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அத்துடன் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
கவிஞரின் மகன் ரவீந்திரன் அப்பாவைப்பற்றி கூறுகிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தருவார்.
மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தருவார்.
புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க” என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய “ஆனந்தக்கோனாரே” பாடலும் சர்ச்சைக்குள்ளானது.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்”
தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.
இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், “நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா’ என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே” என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.
திருக்குறள்
சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.
1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் “திருக்குறள் இசையமுதம்” எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-
“நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்” என்று அப்பா சொன்னார்.
திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.
45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், “இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-
சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.
கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். “சிங்காரி”யில் “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.
“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.
ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.
அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.
இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.
இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”
கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.
கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.
இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:
“ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல
ஆண்டவனே இல்லையே”
- இதுதான் பாட்டு.
இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி - பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.
அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”
சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. “ஆளைக் கண்டு மயங்காதே” படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.”
இவ்வாறு விஜயராணி கூறினார்.
கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.
விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.
நன்றி:Tamil News
தொகுப்பு:மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

No comments: